அமெரிக்காவில் நிறுத்தப்படும் கூகுள் பே; கூகுள் வேலட் தான் இனி..!
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது மொபைல் அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த முடியும். உலகின் மூலை முடுக்கெல்லாம் இதுபோன்ற கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. இதில், கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் முன்னணி ஆப்-ஆக இருக்கிறது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனாலும், கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் வேலட் பயன்பாட்டில் இருக்கும் எனவும், கூகுள் பே-வில் உள்ள வசதிகளை அதில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே வசதி அமெரிக்காவில் மட்டும்தான் நிறுத்தப்படும் எனவும், இந்தியா, சிங்கப்பூர் போன்ற கூகுள் பே சேவை உள்ள பிற நாடுகளில் அதன் செயல்பாடு பயன்பாட்டில் இருக்கும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தியர்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இதுகுறித்து, குழு தயாரிப்பு மேலாளர், கூகுள் பே – ஜோரிஸ் வான் மென்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கூகுள் பே மூலம் எளிய மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறோம். 180க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் கூகுள் பே ஆப்பை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அமெரிக்காவில் ட்ரான்ஸிட் கார்டுகள், ஓட்டுநர் உரிமங்கள், மாநில ஐடிகள் மற்றும் ஸ்டோர்களில் டேப் அண்ட் பே போன்ற சேவைகளில் கூகுள் வேலட் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
கூகுள் பே ஆப்பை விட கூகுள் வேலட் ஆப் பயன்பாடு அமெரிக்காவில் 5 மடங்கு அதிகமாக இருக்கிறது. எனவே, கூகுள் பே ஆப்பின் அமெரிக்க வெர்ஷன் ஜூன் 4ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இருப்பினும், கூகுள் பேவில் வழங்கப்பட்ட டேப் டூ பே (Tap to Pay), ஆன்லைன் பேமெண்ட் உள்ளிட்ட பேமெண்ட் முறைகளை கூகுள் வேலட் ஆப்-இல் (Google Wallet App) அமெரிக்கர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூகுள் பே ஆப் நிறுத்தப்படுவதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் பிறருக்கு பணம் அனுப்புவது, கோருவது, பணம் பெறுவது, உள்ளிட்டவைகளை அனுமதிக்கும் பியர்-டு-பியர் ( peer-to-peer) பேமெண்ட்டுகளை கூகுள் நிறுவனம் நிறுத்துகிறது. ஜூன் மாதத்திற்குப் பிறகு உங்கள் கூகுள் பே பேலன்ஸைப் பார்க்கவும், மாற்றவும் கூகுள் பே இணையதளத்தைப் (Google Pay Website) பயன்படுத்த வேண்டும்.