மகாராஷ்டிர தொகுதி பங்கீடு: உத்தவ் தாக்கரேவுடன் ஒரு மணி நேரம் செல்போனில் பேசிய ராகுல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரவுள்ள தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா எனும் கூட்டணி அமைத்து ஓரணியில் திரண்டுள்ளன.
இருப்பினும், இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறவில்லை. குறிப்பாக, காங்கிரஸுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது. அந்த வகையில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டி என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் இழுபறி நிலவி வந்தது.
இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி, ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனும் தொகுதி பங்கீடை காங்கிரஸ் கட்சி சுமூகமாக முடித்துள்ளது. மேற்குவங்கத்திலும் காங்கிரஸுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி இணைந்து போட்டியிட மம்தா பானர்ஜி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மகாராஷ்டிர தொகுதி பங்கீடு குறித்து சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் சுமார் ஒரு மணி நேரம் ராகுல் காந்தி செல்போனில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. அம்மாநிலத்தில், காங்கிரஸ் சிவசேனா (உத்தவ் தாக்கரே) – தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் கொண்ட மகாவிகாஸ் அகாடி இந்தியா கூட்டணியில் உள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள ஆறு மக்களவை தொகுதிகளில் மும்பை தெற்கு மத்தி, மும்பை வடக்கு மத்தி மற்றும் மும்பை வடமேற்கு ஆகிய மூன்றில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. அதேசமயம், மும்பை – மும்பை தெற்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு மற்றும் மும்பை தெற்கு மத்தி ஆகிய நான்கு தொகுதிகள் உட்பட மாநிலத்தில் உள்ள 18 மக்களவைத் தொகுதிகளில் சிவசேனா (உத்தவ் அணி) போட்டியிட விரும்புவதாக தெரிகிறது.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் மகா விகாஸ் அகாடி கூட்டணியானது கருத்தியல் ரீதியாக ஒன்றோடு ஒன்று முரண்படும் கூட்டணி. எனவே, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சில சிக்கல்கள் நிலவுகின்றன. இருப்பினும், மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 40 இடங்களில் அக்கட்சிகள் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்து விட்டன. ஆனால், 8 தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. கருத்தியல் ரீதியாக ஒன்றோடு ஒன்று முரண்பட்டாலும், மகா விகாஸ் அகாடி கூட்டணி சுமூகமாக தொடர்கிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனா 48 இடங்களில் 22 இடங்களில் போட்டியிட்டு மும்பையில் 3 தொகுதிகள் உட்பட 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதே 2019ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. அதில், அதிகாரப் பகிர்வு பிரச்சினைகளில் உடன்படத் தவறியதால், சிவசேனா கட்சி, பாஜக உடனான 25 ஆண்டுகால கூட்டணியை முறித்ததது.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியமைத்தது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் இணைந்ததால், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். சிவசேனா கட்சியும் அவர் வசம் சென்றது. அதேபோல், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பாஜக கூட்டணியில் இணைந்து துனை முதல்வர் ஆனதால், அந்த கட்சியும் பிளவுபட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் முதல்வர் அசோக் சவான் மற்றும் மிலிந்த் தியோரா ஆகிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். இதுபோன்ற சிக்கல்கள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த விலகல்களால் உத்தவ் தாக்கரேவின் கட்சி மும்பையில் அதிக தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது.
இருப்பினும், உத்தவ் தாக்கரே, சரத் பவார், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இந்த தேர்தல் மிகவும் முக்கியமான ஒவ்வொரு கட்சிக்குமான போர் என்பதை உணர்ந்து சுமூகமாக செயல்படுவதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.