உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு – வைரலாகும் வீடியோ
உலகிலேயே மிக நீளமான அனகோண்டா பாம்பு அமேசான் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாக அமேசான் மழைக்காடுகள் உள்ளன. அங்கு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பல்வேறு புதிய தகவல்களை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது உலகிலேயே மிக நீளமான அனகோண்டா பாம்பு அமேசான் காட்டில் உள்ள நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ஆற்றங்கரையில் தனியார் தொலைக்காட்சியின் ஆவண படப்பிடிப்பின் போது வனவிலங்கு தொகுப்பாளரான பேராசிரியர் ஃபிரீக் வோங்க் (freek vonk) உலகின் நீளமான அனகோண்டாவை கண்டுப்பிடித்தார். இதுவரை தெற்கு பச்சை அனகோண்டா பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முதன்முறையாக வடக்கு பச்சை அனகோண்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அனகோண்டா பாம்பின் தலை மனித தலையின் அளவிற்கு உள்ளது. பாம்பின் வால் முதல் தலை வரை அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. 26 அடி நீளமுள்ள இந்த மிகப்பெரிய பாம்பின் எடை சுமார் 200 கிலோ வரை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
1997 தொடங்கி 2015 வரை ஹாலிவுட்டில் அனகோண்டா தொடர்பான 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் காட்டப்பட்ட அனகோண்டா பாம்புகளை விட நீளமான அனகோண்டா பாம்பு தற்போது அமேசான் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.