பிபிசி தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய குடிமகன் தெரிவு., யார் அவர்?
பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனும், ஊடகவியலாளருமான டாக்டர் சமீர் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, பிரித்தானிய கலாச்சாரத்துறை செயலர் லூசி பிரேசர் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எம்.பி.க்கள் அடங்கிய தேர்வுக் குழு அவரது பெயரை இறுதி செய்யும், இது பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸால் அங்கீகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் பத்திரிகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள சமீர் ஷா, முன்பு பிபிசியின் நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் தலைவராகப் பணியாற்றினார்.
அவர் மார்ச் 2028 வரை (நான்கு ஆண்டுகள்) பிபிசி தலைவராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிபிசியின் தலைவராக (Chairman) சமீர் ஷா ஆண்டுக்கு 160,000 Pounds (இலங்கை பணமதிப்பில் ரூ.6.3 கோடி) சம்பளம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான (Boris Johnson) திரைமறைவு விவகாரம் வெளியானதை அடுத்து ரிச்சர்ட் ஷார்ப் (Richard Sharp) கடந்த ஆண்டு பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.