இந்தியர்களே குட்நியூஸ்! விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நடவடிக்கை
அமெரிக்காவிற்கு செல்ல விசா பெறுவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக பார்க்கப்படும் வேளையில், நமது விண்ணப்பத்தை ஏற்று விசா வழங்க அமெரிக்க அரசு எடுத்துக் கொள்ளும் காலம் விசா வகையை பொறுத்து இது மாறுபடும்.
சமீபத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசிட்டர் விசா விண்ணப்பத்தவர்களுக்கு 600 நாள் வரையில் காத்திருப்பு காலம் இருந்தது மறக்க முடியாது. இந்நிலையில் இந்தியர்களின் விசாக்களை ஏற்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விசிட்டர் விசா காத்திருப்பு காலம் குறைப்பு: அமெரிக்க தூதரகங்கள் துறைக்கான துணை செயலாளர் ரெனா பிட்டர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் , இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வருவோர் எண்ணிக்கை முன் எப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் சுமார் 14 லட்சம் விசா விண்ணப்பங்களை செயல்படுத்தி இருப்பதாக கூறினார். தற்போது விசிட்டர் விசா தவிர மற்ற விசாக்களுக்கான காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நேரமும் குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
விசா : இரு நாடுகளுக்கு இடையிலான உறவு என்பது மக்களிடையிலான சந்திப்பு, தொழில்முறை பயணம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது எனவே அமெரிக்கா அதில் முழு கவனம் செலுத்தி வருகிறது என கூறியுள்ளார்.
ஹெச்1பி விசாக்களை பொறுத்தவரை, இந்தியர்கள் வெளிநாடு செல்லாமலேயே ஹெச்1பி விசாவை புதுப்பிப்பதற்கான சோதனை ஓட்டம் தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் அந்த பணி நிறைவடைந்து நடைமுறைக்கு வரும் என நம்பிக்கை அளித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த திறமை மிகு பணியாளர்களுக்கு அமெரிக்காவில் எப்போதுமே இடமுண்டு என ரெனா பிட்டர் கூறியுள்ளார். அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு முக்கியமானது என கூறிய அவர், ஹெச்1பி விசா தொடர்பாக கடந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் முக்கியமாக விவாதித்தனர் என தெரிவித்தார்.
ஹெச்1பி விசா என்பது நான் – இமிகிரண்ட் வகை விசா ஆகும். அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள் வெளிநாட்டு நிபுணர்களை பணிக்கு அமர்த்த இந்த வகை விசாக்களை பயன்படுத்துகின்றன.
குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களை பணிக்கு அமர்த்த பெரும்பாலும் இந்த வகை விசாக்களையே பயன்படுத்துகின்றன. எனவே ஹெச்1பி விசா நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என இந்தியா தரப்பில் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது.
இதனிடையே அமெரிக்காவில் பயிலும் நான்கு வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவராக இருக்கிறார் என தெரிவித்த பிட்டர், மேற்படிப்புக்காக 2022-23ஆம் ஆண்டில் 2.68 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.