பைஜூ ரவீந்திரன் அவுட்.. பைஜூஸ் முதலீட்டாளர்களின் வாக்குப்பதிவு.. கடைசியில் டிவிஸ்ட்..!!
பைஜூஸ் முக்கிய பங்குதாரர்களான Prosus NV மற்றும் Peak XV பார்ட்னர்ஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரனை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நீக்க நேற்று EGM இல் வாக்களித்துள்ளனர்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த ஆன்லைன் கல்வி நிறுவனமான Byju’s-ன் சிஇஓ பைஜூ ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை உயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கடந்த சில வாரங்களாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், பைஜூஸ் நிறுவனம் இந்த வாக்கெடுப்பை நிராகரித்துள்ளது. “சமீபத்தில் நடைபெற்ற அவசர பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது,” என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வாக்குப்பதிவு, பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் மீதான முதலீட்டாளர்களின் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளைப் படம் போட்டுத் தெளிவாகக் காட்டுகிறது. 2015ல் பைஜூஸ் நிறுவனம் நிறுவிய நாளில் இருந்து பைஜூ ரவீந்திரன் சிஇஓ-வாக உள்ளார்.
இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக இருந்த பைஜூஸுக்கும், அதன் வளர்ச்சிக்கு நிதியுதவி செய்த முக்கிய முதலீட்டாளர்களுக்கும் இடையே நீண்டகால மோதல் தொடர்ந்து வருகிறது. இதன் வெளிப்பாடே இந்த EGM கூட்டத்தின் முடிவுகள்.
வெள்ளிக்கிழமை அன்று, பைஜூஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனத்தில் உயர்மட்ட நிர்வாக குழுவிற்கான கூட்டத்தில் பல மணிநேரம் சலசலப்பு ஏற்பட்டதாகக் கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் தெரிவித்தனர்.
இந்த வீடியோ கான்பிரென்ஸ் கூட்டத்தின் போது பலமுறை அடையாளம் அடையாளம் தெரியாத நபர்கள், விசில் அடித்து, சத்தம் போட்டும் குறுக்கிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவங்கள் பைஜூஸ் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது. நிறுவனர் நீக்கப்பட வேண்டும் என்ற முதலீட்டாளர்களின் கோரிக்கை நிறுவனத்தின் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.
பைஜூஸ் நிறுவனத்தை நடத்துவதற்கு, அதன் நிறுவனரான பைஜு ரவீந்திரன் தகுதியற்றவர் என்று அறிவிக்கக் கோரி, நான்கு பைஜூஸ் முதலீட்டாளர்கள் NCLT-யில் அடக்குமுறை, தவறான நிர்வாக செய்வதாக வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த EGM கூட்டத்தில், பைஜு ரவீந்திரன் மற்றும், பைஜு ரவீந்திரனின் மனைவி திவ்யா கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளையில் EGM-ன் போது நிறைவேற்றப்பட்ட எந்தத் தீர்மானங்களையும் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் பைஜூஸ் நிர்வாகம் தடை உத்தரவைப் பெற்றுள்ளது முக்கியமான விஷயம்.