ஒரேயொரு அட்வைஸ் கொடுத்தார்.. சிறப்பாக பவுலிங் செய்ய காரணமே பும்ரா தான்.. ஆகாஷ் தீப் ஓபன் டாக்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவின் ஆலோசனையை பின்பற்றியதாக இளம் வீரர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது. நட்சத்திர வீரர் ஜோ ரூட் 226 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 106 ரன்களை சேர்த்துள்ளார். அதேபோல் ராபின்சன் 31 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
அதன்பின் ஜோ ரூட்டின் அபார சதம் காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பாக ரன்கள் சேர்த்துள்ளது. இருப்பினும் இந்திய அணி தரப்பில் அறிமுகமான ஆகாஷ் தீப் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். எளிதாக 140 கிமீ வேகத்திற்கும் மேல் வீசும் திறமையுடன் ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரை முதல் 30 நிமிடங்களிலேயே வீழ்த்தி அசத்தினார்.
முதல் நாளில் 17 ஓவர்கள் வீசிய ஆகாஷ் தீப் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து ஆகாஷ் தீப் பேசுகையில், இந்திய அணிக்காக அறிமுகமாகியதில் எனக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக பயிற்சியாளர்களுடன் ஆலோசனை செய்தேன். எந்த டென்ஷனும் இல்லாமலேயே களமிறங்கினேன். இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியையும் எனது கடைசி போட்டியாகவே கருதி களமிறங்குகிறேன்.
அதன் காரணமாகவே தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது. இந்த போட்டி தொடர்பாக பும்ரா என்னிடம் பந்துவீசும் போது லெந்தை கொஞ்சம் குறைத்து வீசுமாறு அறிவுறுத்தினார். அவர் கூறியதை தான் அப்படியே செயல்படுத்தினேன். முதல் விக்கெட் வீழ்த்திய பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது சோகம் தான். இருப்பினும் கிராலியின் விக்கெட்டை விரைந்து வீழ்த்திவிட்டோம்.
அதனால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. காலையில் பிட்சில் கொஞ்சம் பவுலர்களுக்கு உதவி கிடைத்தது. ஆனால் நேரம் கடந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. அதனால் ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் தீர்மானமாக இருந்து பவுலிங் செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.