IND vs ENG : ரோகித் சர்மா சாதனை சமன்.. தெறிக்கவிட்ட ஜோ ரூட்.. இனிமே மெக்கல்லம் பக்கமே போகாதீங்க சார்
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடி வரும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை சேர்த்துள்ளது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 106 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கிட்டத்தட்ட 15 இன்னிங்ஸ்களுக்கு பின் ஜோ ரூட் சதம் விளாசியுள்ளார். இது அவருக்கு 31வது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம் ஜோ ரூட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணிக்காக ஜோ ரூட் அடிக்கும் 10வது சதம் இது. 52 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 10 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலமாக இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதேபோல் ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 சதங்களை விளாசி பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கவாஸ்கர் 13 சதங்கள் விளாசி 2வது இடத்திலும், ஜாக் ஹாப்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 சதங்களை விளாசி 3வது இடத்தில் உள்ளார்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 11 சதங்களை விளாசி சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்திலும் உள்ளார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 80 சதங்களுடன் முதலிடத்திலும், டேவிட் வார்னர் 49வது சதங்களுடன் 2வது இடத்திலும் உள்ளார்.
இந்த வரிசையில் ரோகித் சர்மா 47 சதங்களுடன் 3வது இடத்தில் இருந்த நிலையில், ஜோ ரூட்டும் 47 சதங்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஜோ ரூட் ஓரம்கட்டப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி அதிகளவிலான சதங்களை விளாசியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.