WPL 2024 : கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை.. தோனி ஸ்டைலில் பறந்த சிக்ஸ்.. டெல்லியை பொளந்த பல்தான்ஸ்!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், மும்பை அணி வீராங்கனை சஜனா சிக்சர் அடித்து அபார வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது. கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை அணியிடம் டெல்லி அணி தோல்வியடைந்தது. இதனால் முதல் போட்டியிலேயே மும்பை அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி அணி விளையாடும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி அணிக்காக அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங் – ஷஃபாலி வர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மா 8 பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழைக்க, இங்கிலாந்து வீராங்கனை அலைஸ் கேப்ஸி களமிறங்கினார். இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், லேனிங் 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் – கேப்ஸி இருவரும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். ஜெமீமா ஒரு பக்கம் பவுண்டரி, சிக்சர் என்று பொளந்து கட்ட, இன்னொரு பக்கம் சைலண்ட்டாக கேப்ஸி அரைசதம் விளாசி அசத்தினார். பின்னர் கேப்ஸி 53 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 75 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெமீமா 24 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் அமீலியா கேர் மற்றும் ஸிவர்பிரண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் – யஷ்திகா பாட்டியா கூட்டணி களமிறங்கியது. இதில் ஹேலி மேத்யூஸ் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் ஸிவர்-பிரண்ட் களமிறங்கினார். இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர்.

நிதானமாக ஆடிய ஸிவர்பிரண்ட் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் யஷ்திகா பாட்டியா – ஹர்மன்ப்ரீத் கவுர் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. சிறப்பாக ரன்கள் சேர்த்த யஷ்திகா அரைசதம் அடித்து ஆட்டமிழைக்க, ஆட்டத்தை வென்று கொடுக்கும் பொறுப்பு ஹர்மன்ப்ரீத் கவுர் கைகளில் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவையாக இருந்தது.

இதில் ஸிகா பாண்டே வீசிய 18வது ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், சதர்லேண்ட் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 1 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த ஓவரில் ஹர்மன்ப்ரீத் கவுர் சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். இதனால் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது. கேப்ஸி வீசிய முதல் பந்திலேயே பூஜா வஸ்தரேக்கர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்த 2 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்டது.

4வது பந்தை சந்தித்த ஹர்மன்ப்ரீத் கவுர் பவுண்டரி அடிக்க, 5வது பந்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் 55 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கடைசி பந்தில் மும்பை அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது வந்த சஜனா, கேப்ஸி வீசிய பந்தில் சிக்சரை விளாசி அசரடித்தார். இதன் மூலமாக மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *