கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞருக்கு காதலர் தினத்தன்று பிரித்தானியாவில் நடந்த பயங்கரம்…
இந்தியாவிலிருந்து கனவுகளுடன் பிரித்தானியாவுக்குச் சென்ற ஒருவரது உயிர் அநியாயமாக பறிக்கப்பட்ட சம்பவம் ஒன்றைக் குறித்த விவரங்களை பிரித்தானிய பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
கனவுகளுடன் பிரித்தானியாவுக்குச் சென்ற இந்தியர்
ஹொட்டல் தொழிலில் சாதிக்கும் கனவுகளுடன் இந்தியாவின் கோயம்புத்தூரிலிருந்து இங்கிலாந்திலுள்ள Reading என்னும் நகருக்குச் சென்றவர் விக்னேஷ் பட்டாபிராமன் (38).
ஆனால், காதலர் தினத்தன்று, அதாவது, இம்மாதம் 14ஆம் திகதி, இரவு 11.50 மணிக்கு, பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த விக்னேஷ் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
மோதியவர் வாகனத்துடன் விரைய, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிந்தார்.
எட்டு பேர் கைது
இந்த சம்பவம் ஒரு விபத்து என முதலில் கருதப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஷாஸேப் காலித் (Shazeb Khalid, 24) என்பவரும், அவருக்கு உதவியதாக 20 முதல் 48 வயது வரையுள்ள மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த விக்னேஷ் மீது மோதிய காரில் இருந்த ஒருவர் அவரைத் தாக்கியதும் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கலைந்த கனவுகள்
இந்தியாவில் பிறந்த விக்னேஷ், ஒரு வருடத்திற்கு முன் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார். அவரும் இந்தியக் குடிமகளான அவரது மனைவியான ரம்யாவும் Reading என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.
விக்னேஷ் கொல்லப்பட்ட அன்றுதான் அவருக்கு புதிதாக லண்டனில் ஒரு பணி கிடைத்துள்ளது. லண்டனில் ஹொட்டல் ஒன்றை நிர்வகிக்கும் கனவுகளுடன் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விக்னேஷின் கனவுகளும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் கனவுகளும் அன்றிரவே கலைந்துபோயின.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்