மனைவியின் போனை ஒட்டுக்கேட்டு 2 மில்லியன் டாலர் வருமானம்… அமெரிக்க கணவர் சொன்ன ஷாக் பிஸினஸ்!
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் அலுவலகம் தொடர்பான உரையாடல்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்ததன் மூலம் கிட்டத்தட்ட 2 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். US செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் தனது சமீபத்திய தகவலின் படி, வீட்டில் இருந்து வேலை செய்யும் போது தனது துணையின் உரையாடல்களை கணவர் ஒட்டுக் கேட்டது தெரியவந்துள்ளது.
US Securities and Exchange Commission (SEC) சமீபத்தில் BP Plc மேலாளரின் கணவரான Tyler Loudon-க்கு எதிரான குற்றச்சாட்டுகளை அறிவித்தது. அதாவது, BP-ல் M&A மேலாளராக இருந்த மனைவியின் அலுவலக உரையாடலில் ரகசியத் தகவலில் இருந்து லாபம் பெற்றதுதான் குற்றச்சாட்டு. இருவரும் தொலைதூரத்தில் பணிபுரியும் போது, டிராவல்சென்டர்ஸ் ஒப்பந்தம் குறித்த அவரது மனைவியின் உரையாடல்களைக் கேட்டதன் மூலம், பிப்ரவரி 16, 2023 அன்று பங்குகளை பொதுவெளிக்கு அறிவிக்கும் முன்னரே லௌடன் டிராவல்சென்டர்ஸ் பங்குகளை வாங்கியுள்ளார்.
ஹூஸ்டனில் வசிக்கும் 42 வயதான லௌடன், தனது மனைவியின் வணிக உரையாடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் பத்திர மோசடி செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
BP-ல் மேலாளராக பணிபுரிந்த லௌடனின் மனைவி, நிறுவனத்தின் கையகப்படுத்தல் திட்டங்களைப் பற்றிய முக்கியமான விவரங்களை கவனக்குறைவாக அவருக்கு வெளிப்படுத்தியதாக தெரிகிறது. ஓஹியோவை தளமாகக் கொண்ட ஒரு டிரக் ஸ்டாப் மற்றும் ட்ராவல் சென்டர் நிறுவனத்தைப் பெறுவதற்கான BP-ன் திட்டத்தின் பிரத்தியேக தகவலை கேட்டவுடன், லௌடன் தான் அதில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் டிரக் ஸ்டாப் நிறுவனத்தின் 46,000 பங்குகளை இணைப்பு அறிவிப்புக்கு முன் வாங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, லௌடன் பங்குகளை உடனடியாக விற்று, 1.76 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 கோடி) லாபத்தைப் பெற்றார். லௌடனின் இத்தனை நடவடிக்கைகள் குறித்தும் அவரது மனைவிக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, விசாரணை நடத்தப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், லௌடனுக்கு மே 7ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகள் வரை ஃபெடரல் சிறைத்தண்டனை மற்றும் 250,000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.