கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைப்பு: வெளியுறவுத்துறை தகவல்
எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தஹ்ரா குளோபல் வழக்கில் கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன” என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கத்தாருக்கான இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளுடன் குடும்ப உறுப்பினர்களும் இன்று கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தோம். மேலும் அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர் கத்தாரில் உளவு பார்த்ததாகக் கூறி கடந்த 2202ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 8 பேருக்கும் கத்தார் நாட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்ற அக்டோபர் மாதம் மரண தண்டனை விதித்தது.
கைது செய்யப்பட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் கத்தார் தரப்பில் பகிரங்கமாக வெளியிடப்படாத நிலையில், மரண தண்டனையை எதிர்த்து கத்தாரில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்தியா கடந்த மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், மரண தண்டனை சிறை தண்டனையாகக் குறைத்துள்ளது. விரிவான தீர்ப்புக்காக காத்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று இப்போது தெரியவில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டு இந்தியா – கத்தார் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கத்தாரில் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியக் கைதிகள் எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தைக் கழிக்க இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் தண்டிக்கப்பட்ட கத்தார் குடிமக்களுக்கும் இதேபோன்ற விதி உள்ளது.