இன்று மாசி மகம் : ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் மாசி மகம்..!
மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த மாதமாக திகழ்கிறது. மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்வது இயல்பு. பாவம் செய்துவிட்டு பாவத்துக்குப் பரிகாரமாக புண்ணியம் தேடி ஒவ்வொருவரும் பல்வேறு ஆலயங்களுக்குச் செல்கிறோம். இதனால் ஏற்படும் தோஷத்தை போக்கிக்கொள்வதற்காக ஜபம் தபம் போன்ற பல்வேறு பரிகாரங்களைச் செய்கிறோம்.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள்.
குறிப்பாக மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. அது மட்டுமின்றி மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வடபகுதிகளில் இதனை கும்பமேளா என்பார்கள்.
மாசி மகத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம். சிவனிடம், சக்தியே பெரியது என விவாதித்ததின் பலனாக சிவனின் சாபத்திற்கு ஆளாகி வலம்புரி சங்காக மாறி தாமரையில் தவமிருந்தாள் அன்னை பார்வதி. இந்த நேரம் தட்ச பிரஜாபதி தன் இணையாளுடன் சென்று யமுனை நதியில் நீராடினான். அப்போது வலம்புரி சங்கினை அவர் கையில் எடுத்ததும், எண்ணி பார்க்காத வகையில் அழகிய பெண் குழந்தையாக அந்த சங்கு மாறியது. இதைக் கண்டு அவர் திகைப்புற்றார். அந்த பெண் குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று தாட்சாயிணி என பெயரிட்டு வளர்தெடுத்தார். இப்படி அம்பிகை வலம்புரி சங்காக கிடந்து, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான்.
மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிபவுர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது. காரடையான் நோன்பு என்று இதைக் கொண்டாடுவார்கள். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.