இன்று புதுச்சேரி முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் விழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாமல், தமிழகத்தை சேர்ந்த ஏராளமான கோவில்களை சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்கள். ஒரே இடத்தில் அனைத்து சாமிகளும் வருவதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள்.
அந்த வகையின் இந்த ஆண்டு மாசிமக பெருவிழா இன்று (பிப்.24) ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் புதுச்சேரி முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மேல்நிலை பள்ளிகளுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அது வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொது மக்களின் வசதிக்காகவும் நகரின் பிரதான சாலைகளில் இன்று காலை 8 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சந்திப்பில் இருந்து ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வித வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. எனவே, காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு இசிஆரில் வரும் அனைத்து வகை வாகனங்களும் சிவாஜி சதுக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
புதிய பஸ் நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக சென்னை இ.சி. ஆரில் செல்லும் பஸ்கள் அனைத்தும் வெங்கடசுப்பா சிலையில் வலதுபுறம் திரும்பி, மறைமலை அடிகள் சாலை வழியாக நெல்லிதோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜிவ் காந்தி சதுக்கம், சிவாஜி சிலை வழியாக சென்னை செல்ல வேண்டும்.