எங்கள் முயற்சி வெற்றி : பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை உயரவில்லை..!
கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே, மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் குறைந்த விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ‘பாரத் அரிசி’ விற்பனை பிப்.9-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில் அடுத்த 4 முதல் 5 மாதங்களில் 15 லட்சம் டன் அரிசி மற்றும் 15 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும் என மத்திய உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலைகள் நிலையாக உள்ளன. தற்போது பாரத் அரிசியின் விற்பனை சற்று குறைவாக உள்ளது. ஆனால் வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும். தொடர்ந்து, அடுத்த 4 முதல் 5 மாதங்களில் 15 லட்சம் டன் அரிசி மற்றும் 15 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதுவரை 3.5 லட்சம் டன் கோதுமை மாவும், 20 ஆயிரம் டன் அரிசியும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் உயர்ந்து வரும் அரிசியின் விலை, பாரத் அரிசியின் சில்லறை விற்பனை மற்றும் மார்ச் முதல் ரபி பயிர் வருகையால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அரிசியைத் தவிர, கோதுமை மாவு, கோதுமை மற்றும் சர்க்கரை மற்றும் நிலையாக உள்ளன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.