இந்த தேதிக்கு பின் மக்களவை தேர்தல் அட்டவணையை வெளியாக வாய்ப்பு..!
மத்திய தேர்தல் குழு அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் ஆயத்த நிலையை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது, தமிழ்நாட்டில் ஆய்வு செய்கின்றனர். பின்னர் உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் செல்லவுள்ளனர். இந்த பயணங்கள் மார்ச் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, தேர்தல் அட்டவணை மார்ச் 13-ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முந்தைய 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி அறிவித்தது. 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தொடர்ந்து மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க, சுமார் 91.2 கோடி மக்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களில் 67 சதவீதம் அதிகமானோர் மட்டுமே வாக்களித்தனர். தரவுகளின்படி, இந்த ஆண்டு, சுமார் 97 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.