குப்பை பொறுக்கும் கோடீஸ்வரன்… சொந்தமாக 10 வீடுகள்… பணமிருந்தும் ஏன் இப்படி?
பொதுவாக, ஒருவரிடம் நிறைய பணம் இருக்கும்போது அவர் என்ன செய்வார்? பல முதலீடுகள் செய்வார், ஆடம்பரமான வீட்டை வாங்குவது ஒருவரின் பட்டியலில் உள்ள முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில், இன்னும் சிலர் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவர். அதே சமயம், சிலர் பணத்தோடு பணத்தை சம்பாதிக்க ஆசைப்படுவார்கள். இருப்பினும், இன்று நீங்கள் பார்க்கப்போகும் நபர் மேலே சொல்லப்பட்ட அத்துணை நபர்களிடம் இருந்தும் முற்றிலும் மாறுபட்டவர்.
ஜெர்மனியில் வசிக்கும் இந்த கோடீஸ்வரரின் பெயர் ஹெயின்ஸ் பி. இவரைப் பார்க்கும் யாருக்கும் அவர் இவ்வளவு சொத்து வைத்திருக்கிறாரா என்பதை யூகிக்க முடியாது. இந்த கோடீஸ்வரர் வாழும் வாழ்க்கையானது, பொதுவாக வீடற்ற நபருடைய வாழ்க்கையை ஒத்தது ஆகும். இந்த நபருக்கு பத்து வீடுகள் இருந்தாலும், அவர் குப்பைகளை சேகரித்து தனக்கான உணவைப் பெறுகிறார்.
உணவுக்கான குறைந்தபட்ச செலவு:
பொதுவாக மக்கள் உணவுக்காக அதிகம் செலவழிக்கிறார்கள், ஆனால் ஹெயின்ஸ் பி-க்கு மாதம் ரூ.450 மட்டுமே செலவாகிறதாம். அதுவும் பல நேரங்களில், குப்பையில் வீசப்படும் உணவில் இருந்து அவரே உணவு ஏற்பாடு செய்து கொள்கிறார். அவரைப் பொறுத்தவரை, மக்கள் ஒரு குடும்பத்திற்கே தேவையான அளவு உணவை தினமும் வீணடிக்கிறார்கள் என்கிறார்.
இப்படிப்பட்ட ஹெயின்ஸ் பி-யின் சொத்து மதிப்பை கேட்டால் அதிர்ந்து போவீர்கள். 2021ஆம் ஆண்டில், அவர் 7 வீடுகள் மற்றும் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருந்தார், அதே நேரத்தில் வங்கி இருப்பு ரூ. 4 கோடிக்கு மேல் இருந்தது. அதை பயன்படுத்தி தற்போது வீடு வாங்கி 10 வீடுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். இது தவிர, சுமார் ரூ.90 லட்சம் அவரது ஃபிக்ஸட் டெபாசிட்டில் உள்ளதாம். இது மட்டுமா? அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3 லட்சத்து 23 ஆயிரம் ஓய்வூதியம் பெறுகிறார். மற்றொரு ஓய்வூதியத்தில் ரூ.14 ஆயிரம் பெறுகிறாராம். இதையெல்லாம் மீறி, ஒரு யாசகரைப் போல தனது வாழ்க்கையை வாழ்ந்து, உடைந்த சைக்கிளில் பயணிக்கிறார் ஹெய்ன்ஸ் பி. விசித்திரமான நபராக இருக்கிறார் அல்லவா?