கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா..? சாப்பிடக்கூடாதா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண்ணுக்கு எந்தவித தடங்கலும், தாமதமும் இல்லாமல் கர்ப்பம் உண்டாகின்றபோது ஒட்டுமொத்த குடும்பமும், உறவுகளும் குதூகலம் அடைகின்றனர். அப்போது முதலே, அந்தப் பெண் என்ன சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்பதை கண்ணும், கருத்துமாக தீர்மானிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
சத்தான உணவுகள், பழங்கள், நட்ஸ் என்று கர்ப்பம் காலம் முழுக்க கர்ப்பிணி பெண்களுக்கு தனிக்கவனத்துடன் பார்த்துக் கொள்வார்கள். அதே சமயம், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்று தொன்றுதொட்ட காலம் முதல் இன்றைக்கு வரை பெரும் பட்டியலே உள்ளது.
அதில் முதல் இடத்தில் இருப்பது பப்பாளி தான். பப்பாளியை தொடவே கூடாது என்று பெரியவர்கள் கட்டுப்பாடு விதித்து விடுவார்கள். ஏதோ நினைப்பில், மறந்துபோய் பப்பாளியை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு விட்டால் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ளும்.
சரி, உண்மையிலேயே பப்பாளி இந்த அளவுக்கு அச்சுறுத்தல் நிறைந்த உணவா? கர்ப்ப காலத்தில் இதை துளியளவும் சாப்பிடக் கூடாதா? என்ற கேள்விகள் உங்கள் மனதில் நிறைந்திருக்கலாம். அதற்கான பதில் இதோ.
பப்பாளியின் பலன்கள் :
கர்ப்ப காலத்தில், முழுமையாக பழுத்த பப்பாளி பழம் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது தான். அதிலும் விட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம் மற்றும் பீடா கரோடின் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த பப்பாளியை எடுத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஃபோலிக் அமிலம் கர்ப்ப காலத்தில் மிகவும் தேவையான சத்து ஆகும். இது குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. பப்பாளியில் இந்த சத்து கிடைக்கும்.
பிரசவத்திற்கு பின் பப்பாளி சாப்பிட்டால் பால் உற்பத்தி பெருகும்.
பப்பாளி சாப்பிட்டால் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கும்.
பப்பாளியின் பின்விளைவுகள் :
பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பானது என்றாலும், முழுமையாக பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் கர்ப்பப்பையில் பிடிப்புகள் உண்டாகும் மற்றும் குறைப்பிரசவம் நிகழும்.
பப்பாளியின் விதைகள் மற்றும் இலைச்சாறு ஆகியவை பாதுகாப்பானவை கிடையாது. அவை நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம்.
ஏற்கனவே கருச்சிதைவு மற்றும் கர்ப்பம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்கள் பப்பாளியை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பகால சர்க்கரை நோய் பிரச்சினையை எதிர்கொள்ளும் பெண்கள் இந்தப் பழத்தை சாப்பிடக் கூடாது.
பழுக்காத பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் என்னும் சத்து, மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடும்.
என்னதான் பதில்?
இறுதியாக பப்பாளியை சாப்பிடலாமா, வேண்டாமா என ஒற்றை வரியில் கேட்டால், நன்கு பழுத்த பழத்தை கொஞ்சமாக எடுத்துக் கொள்வதில் தவறேதும் கிடையாது. பப்பாளி சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்ற மனோபாவம் நாடெங்கிலும் பரவியிருக்கிறது என்றாலும், அறிவியல்பூர்வமாக இது நிரூபனம் செய்யப்படவில்லை.