இந்திய அணியில் விரிசல்? கேப்டனுடன் மல்லுக்கு நிற்கும் 2 வீரர்கள்.. ஹர்திக் பாண்டியா தான் காரணமா?

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா தங்களை நீக்கியதால் இரண்டு வீரர்கள் பனிப்போர் நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் தற்போது பிசியோ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டி20 அணியின் கேப்டன் பதவிக்கு குறி வைத்திருக்கும் ஹர்திக் பாண்டியா இதன் பின்னணியில் இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அந்த இரண்டு வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர். இவர்களில் இஷான் கிஷன் அணியில் மாற்று வீரராகவே ஓராண்டு காலம் இருந்தார். அத்துடன் டி20 அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என அவர் நினைத்த போது, ஜிதேஷ் சர்மாவை இந்திய அணி விக்கெட் கீப்பராக இரண்டு தொடர்களில் பயன்படுத்தியது. அதனை அடுத்து தனக்கு மனச் சோர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பாதியில் விலகினார் இஷான் கிஷன்.
அதன் பின் இந்திய அணி நிர்வாகம் கூறியும் உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்காமல், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறார். அதுவும் ஹர்திக் பாண்டியாவுடன் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதான் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. அவர்கள் இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள் என்பதால் ஒன்றாக பயிற்சி செய்கிறார்கள் என சொல்லப்பட்டாலும், இது இந்திய அணியில் விரிசலை உண்டாக்கும் முயற்சி எனவும் பார்க்கப்படுகிறது.
மற்றொரு வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு பல வாய்ப்புகள் கொடுத்த போதும் அவர் சரியாக செயல்படவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த அவர் இரண்டு போட்டிகளின் முடிவில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அவரை உள்ளூர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும் ஏன் இந்திய அணி நிர்வாகம் கூறிய போது அவர் தனக்கு முதுகு வலி இருப்பதாக கூறி எந்தப் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருக்கிறார். தன்னை அணியில் இருந்து நீக்கியதால் ஸ்ரேயாஸ் ஐயர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவருமே கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் கூறியும் உள்ளூர் போட்டியில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை தட்டிப் பறித்து இருக்கிறார். அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியையும் எதிர்பார்த்து இருக்கிறார். இது பெரிய விரிசல் இல்லை என்றாலும், அப்படி ஒன்று நடப்பதற்கான ஆரம்பப் புள்ளியா?