இந்திய பங்குச் சந்தையில் புதிய மாற்றம்.. இதுதான் சரியான நேரம்..!! #BSE
இந்தியாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது வர்த்தகத்தை துவங்கிய ஹூண்டாய் இந்தியா சமீபத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த அறிவிப்பு, இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் வேளையில் அடுத்த குட் நியூஸ் வந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் குறிப்பிடத்தக்க வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் வேளையில், இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
இதனாலேயே பங்குச்சந்தை பட்டியல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சாதகமாக கருத்துக்கள் வெளியாவது மட்டும் அல்லாமல் இதன் வெற்றி வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய ஐபிஓ வெற்றி இந்தியாவில் செயல்படும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஐபிஓ வெளியிட வழிவகுக்கும் என்று வெளிநாட்டு பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான Jefferies கணித்துள்ளது.
இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள சில உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் சொந்த நாடுகளில் கிடைப்பதை விட அதிகமான மதிப்பீடுகளை இந்தியாவில் அனுபவிக்கிறது. மேலும் உலகளாவிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை விட வேகமாக சந்தை மூலதன வளர்ச்சியை இந்தியாவில் அனுபவித்து வருகின்றன.
சமீபத்தில், British American Tobacco (அதன் ஐடிசி பங்குகள்), Whirlpool மற்றும் ஹூண்டாய் ஆகியவை அதன் இந்திய கிளைகளின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன. இது, இந்தியாவில் செயல்படும், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இந்திய சொத்துக்களை பட்டியலிடவோ அல்லது பணமாக்கவோ வழிவகுக்கும் என்று தெரிகிறது.
ஹூண்டாய் ஐபிஓ வெற்றி அடைந்தால் அமேசான், சாம்சங், ஆப்பிள், டொயோட்டா போன்ற பெரிய உலகளாவிய நிறுவனங்களும் இந்தியாவில் ஐபிஓ வெளியிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இது இந்திய பங்குச் சந்தைக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஹூண்டாய் நிறுவனத்தின் அறிவிப்பு பன்னாட்டு நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு இந்திய சந்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதை காட்டுகிறது.
எடுத்துக்காட்டாக, ஹூண்டாய் இந்தியா, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டும் நோக்கில் பட்டியலிட ஆர்வம் காட்டியுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய IPO ஆக இருக்கும், மேலும் அதன் மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும்.
இது அதன் தென் கொரியாவில் சியோல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள ஹூண்டாய் 42 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பீட்டை கொண்டு இருக்கும் வேளையில், இந்தியாவின் இதன் மதிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
அதேபோல், வர்ல்பூல் நிறுவனம், அதன் இந்திய கிளையில் 24 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் உலகளாவிய வர்த்தகத்தின் கடனை திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தி, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும், பங்குச்சந்தை நிபுணர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது இந்திய பங்குச்சந்தை இதுவரையில் பார்த்திடாத ஒரு மாற்றம் என்றால் மிகையில்லை. ஹூண்டாய் நிறுவனத்தில் முதலீடு செய்வீர்களா..?