இன்று மாசி மகம் பௌர்ணமி 2024 : சக்தி வாய்ந்த நவகிரக தோஷ பரிகாரங்கள் இதோ.!!
இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை அதாவது, இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.. ஏனெனில், இன்று தான் மாசி மாத பெளர்ணமி நாளான, மாசி மகம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நீர்நிலைகளில் புனித நீராடுவது, ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பது, முன்னோர்களுக்கு பித்ரு கடன் அளிப்பது 7 பிறவி பாவங்களைப் போக்கி, முக்தியைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.
மாசி மகத்தன்று சிவன், விஷ்ணு, முருகன் என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவதற்கு உகந்த நாளாகும். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான விஷயம். இருந்த போதிலும், ஜோதிட நம்பிக்கைகளின்படி, மாசிமகம் அன்று ஜாதகத்தில் இருக்கும் கிரகளை சாந்தி செய்வதும், கிரக தோஷங்களில் இருந்து விடுவிக்கும் நாள் என்று கூறப்படுகிறது. எனவே, கிரகங்களால் ஏற்படும் துன்பங்களையும் நீக்க உதவும் சில சிறப்பான பரிகாரங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கிரக தோஷங்களில் இருந்து விடுபட வழிகள்:
பொதுவாகவே, ஒவ்வொருவருக்கும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல நவகிரகங்கள் அதன் பலன்களை வழங்கும். உதாரணமாக, சிலருக்கு அவை ஒரு காலகட்டத்தில் யோகத்தை கொடுக்கும், மற்றொருவருக்கோ தோஷத்தைக் கொடுக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரர், ராகு மற்றும் கேது ஆகியவையே நவகிரகங்கள் ஆகும். எனவே, கிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்க மாசி மாதம் பெளர்ணமி உகந்த நாள். எனவே, இந்நாளில், செய்ய வேண்டிய சில பரிகாரங்கள் இங்கே…
சூரிய தோஷம் நீங்க பரிகாரம்: இன்று மாசி மகம் என்பதால், காலையிலேயே நீராடி, சூரியனுக்கு அர்க்கியம் செய்து, ஆதித்யா ஹ்ருதய ஸ்தோத்திரத்தை சொல்ல வேண்டும். இந்நாளில் கோதுமை, சிவப்பு சந்தனம் மற்றும் சிவப்பு ஆடைகளை தானம் செய்ய வேண்டும். மேலும், சந்திரனை அமைதிப்படுத்த இனிப்பு பண்டங்கள், பொருட்கள், சர்க்கரை மற்றும் அரிசி தானம் செய்ய வேண்டும்.
செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்: செவ்வாய் தோஷம் நீங்க உளுத்தம்பருப்பு, வெல்லம், சிவப்பு ஆடை, செம்புப் பாத்திரங்கள் ஆகியவற்றை தானமாக கொடுக்க வேண்டும்.
புதன் தோஷம் நீங்க பரிகாரம்: ஜாதகத்தில் புதனை வலுப்படுத்த நெல்லிக்காய், எண்ணெய் மற்றும் பச்சை காய்கறிகளை தானமாக கொடுக்க வேண்டும்.
குரு தோஷம் நீங்க பரிகாரம்: உங்கள் ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால் திருமண தடை ஏற்படும். எனவே, இந்த தோஷத்தை நீக்கும் பரிகாரமாக, மஞ்சள் கடுகு, குங்குமம், மஞ்சள் சந்தனம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.
சுக்கிர தோஷம் நீங்க பரிகாரம்: ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருந்தால் கற்பூரம், நெய், வெண்ணெய், வெள்ளை எள் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.
சனி தோஷம் நீங்க பரிகாரம்: உங்கள் ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷம் நீங்க பரிகாரமாக கருப்பு எள், நல்லெண்ணெய், இரும்பு பாத்திரம், கருப்பு ஆடை போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
ராகு தோஷம் நீங்க பரிகாரம்: ராகு தோஷம் நீங்க, போர்வைகள், உணவு, உள்ளாடைகள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
கேது தோஷம் நீங்க பரிகாரம்: கேது தோஷம் நீங்க ஆடைகள் தானம் செய்ய வேண்டும்.