விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!
விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு எம்எல்ஏவாக விஜயதரணி மூன்றாவது முறையாக இருந்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதரணி வகித்து வருகிறார். ஆனால், விஜயதரணிக்கு தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆகையால், எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி எப்படியாவது சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
ஆனால், ராகுல்காந்தி நெருக்கம் மற்றும் அனுதாபம் ஓட்டு கிடைக்கும் என்ற அடிப்படையில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக விஜயதாரணி தீவிர அரசியிலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இந்த முறை தனக்குச் சீட்டு வழங்க வேண்டும் என்று கட்டன் ரைட்டாக தலைமையிடம் கூறியுள்ளார். ஆனாலும் தேசிய தலைமையின் ஆதரவும், திமுக சப்போர்ட்டின் அடிப்படையில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் கடும் அதிருப்தியில் விஜயதரணி இருந்து வருவதாகவும் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.