” எங்கள் நண்பர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்” 2024 மக்களவை தேர்தல் குறித்து புடின் பேச்சு..
ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தனது நண்பர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த புடின், இந்தியா ரஷ்யா பாரம்பரிய நட்புறவு தொடரும் என்றும் தெரிவித்தார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமரிடம் பேசியதாகவும் புடின் தெரிவித்தார். உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். பிரதமர் மோடி அமைதியான வழிகளில் பிரச்சினையைத் தீர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார் என்பதை நான் அறிவேன்,” என்று அவர் கூறினார்,
தொடர்ந்து பேசிய புடின் “உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து கொந்தளிப்பையும் மீறி, ஆசியாவில் உள்ள நமது உண்மையான நண்பரான இந்தியாவுடனான உறவு அதிகரித்து வருவதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார். மேலும் “எங்கள் அன்பான நண்பரும், பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்யாவிற்கு வந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம், இது தொடர்பான, தற்போதைய அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், ரஷ்ய மற்றும் இந்திய உறவின் வாய்ப்புகள் குறித்து பேசவும் முடியும்” என்று கூறினார்.
பிரதமருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி ஜெய்சங்கரிடம் புடின் கேட்டுக் கொண்டார். அப்போது பேசிய அவர் “தயவுசெய்து, நாங்கள் அவரைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவரிடம் சொல்லுங்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் “பிஸியான அரசியல் அட்டவணை” இருக்கும். நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதில் எங்கள் நண்பர்கள் வெற்றிபெற வாழ்த்துவோம். எப்படியிருந்தாலும், அரசியல் சக்திகளின் கூட்டணி எப்படி இருந்தாலும், பாரம்பரிய மரபுவழி நட்புறவு நம் நாடுகளுக்கு இடையே நீடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ,” என்று ரஷ்ய அதிபர் கூறினார்.
உக்ரைன் போரின் தொடக்கத்தில் இருந்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி, புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோரை சந்தித்து, மோதல் குறித்து விவாதித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் அதிபரை சந்தித்த பிரதமர் மோடி, மோதலை தீர்க்க இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார். 2021 இல் சமர்கண்டில் புடினுடனான சந்திப்பின் போது, பிரதமர் அவரிடம் இது “போரின் சகாப்தம் அல்ல” என்று கூறினார்.
உலகளாவிய விமர்சனங்கள் இருந்தபோதிலும், உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக மேற்கு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்த பிறகு, இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. டாக்டர் ஜெய்சங்கர் இதுகுறித்து பேசிய போது, “நாட்டின் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்று பிரதமர் தன்னிடம் கூறியதாகக் கூறியிருந்தார். ஒவ்வொரு நாடும், அதன் குடிமக்களுக்கு சாத்தியமான சிறந்த ஒப்பந்தத்தைப் பெறவும், அதிக எரிசக்தி விலைகளின் தாக்கத்தைக் குறைக்கவும் முயற்சிப்பதாகவும், இந்தியாவும் அப்படியே செயல்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.