H1B விசா-ஐ விட்டுத்தள்ளுங்க.. அமெரிக்காவில் வேலை செய்ய பல வழி இருக்கு..!!
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் விசா வகைகளில் ஒன்று H1B விசா ஆகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் திறமை பெற்றவர்களை வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்துவதற்காக அமெரிக்க நிறுவனங்கள் இத்தகைய விசாவைப் பயன்படுத்துகின்றன.
இதன் மூலம் அமெரிக்காவில் பல வருடங்களாக இருக்கும் திறன் பற்றாக்குறை பிரச்சனையை சமாளித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தின் புதுமை மற்றும் போட்டித்திறனை அதிகரிக்க முடியும்.
ஆனால், அமெரிக்க அரசு வழங்கும் H1B விசாக்களின் எண்ணிக்கையை விட தேவை அதிகமாக இருப்பதால், கடுமையான போட்டி நிலவுகிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு, ஒவ்வொரு நிதியாண்டிலும் 65,000 H1B விசாக்களை வழங்கிறது. இதில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற வெளிநாட்டினருக்கு என 20,000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2021 நிதியாண்டில், விண்ணப்பிக்க தொடங்கிய முதல் வாரத்திலேயே, USCIS அமைப்புக்கு 275,000க்கும் மேற்பட்ட H1B விசா மனுக்கள் கிடைத்தன. இது, கிடைக்கும் விசாக்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம். இதன் காரணமாக, தகுதியுடைய பல விண்ணப்பதாரர்கள் விசா தேர்வு செய்ய லாட்டரி முறை கொண்டுவரப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இந்திய ஐ.டி. துறை நிபுணர்கள் அமெரிக்காவில் பணியாற்ற பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. லாட்டரி முறையில் அதிர்ஷ்டம் மிகவும் அவசியம் என்பதால் H1B விசா தாண்டி மாற்று வழிகளை ஆராய்வது அவசியமாகியுள்ளது. இப்படி ஹெச்1பி விசா தாண்டி அமெரிக்காவிலும், அமெரிக்க நிறுவனத்திலும் பணியாற்ற உதவி செய்யும் பிற முக்கிய விசா மற்றும் வழிகளை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பின் தகவலின்படி, 2019 நிதியாண்டில் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட H1B விசா மனுக்களில் 72% இந்தியாவில் இருந்து வந்தவை. இதற்கு அடுத்தபடியாக சீனாவிலிருந்து 13% விசா மனுக்கள் வந்தன.
H1B விசாக்களுக்கான கடும் போட்டி காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் இந்திய திறன்வாய்ந்த ஊழியர்களை பணியில் அமர்த்த பல வழிகளை கையாளுகிறது. அத்தகைய வழிகளை அமெரிக்க கனவுடன் இருக்கும் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
L1 விசா: L1 விசா என்பது அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு கிளைகளில் பணிபுரிபவர்களை அமெரிக்காவில் உள்ள தங்கள் கிளைகளுக்கு மாற்றுவதற்கானது. L1 விசா இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: L1A மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கானது, மற்றொன்று சிறப்பு திறன்கள் (specialized knowledge) கொண்ட தொழிலாளர்களுக்கான L1B.
L1 விசாவுக்கு எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லை. மேலும் தொழிலாளர் சான்றிதழோ அல்லது சம்பள தீர்மானமும் தேவைப்படுவதில்லை.
O1 விசா: O1 விசா என்பது அறிவியல், கல்வி, வணிகம், விளையாட்டு, கலை அல்லது திரைப்படத் துறைகளில் சிறந்த திறமை அல்லது சாதனை பெற்ற வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் விசா ஆகும்.
O1 விசாவுக்கு எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லை. மேலும் தொழிலாளர் சான்றிதழோ அல்லது நிலவும் சம்பள தீர்மானமும் தேவைப்படுவதில்லை.
E2 விசா: E2 விசா என்பது அமெரிக்காவில் வர்த்தகத்தை துவங்கி நடத்துவதற்காக முதலீடு செய்யும் வெளிநாட்டு குடிமக்களுக்கானது. E2 விசா அமெரிக்காவுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கொண்ட நாடுகளின் குடிமக்களுக்கே கிடைக்கும்.
இந்தியா அத்தகைய நாடுகளில் இல்லை, ஆனால் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்தியா – அமெரிக்கா எதிர்காலத்தில் இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது. E2 விசாவுக்கு எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லை. மேலும் தொழிலாளர் சான்றிதழோ அல்லது நிலவும் சம்பள தீர்மானமும் தேவைப்படுவதில்லை.
தொலைதூர வேலை (Remote Work): அமெரிக்க நிறுவனங்கள் இந்திய திறமை வளத்தைப் பயன்படுத்த, விசா அல்லது குடியேற்ற செயல்முறை எதுவும் தேவையில்லாமல், தொலைதூர வேலை அதாவது ரிமோட் வேலைவாய்ப்புகளை வழங்கலாம். தொலைதூர வேலை மூலம், பணியாளர்கள் digitais கருவிகள் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி உலகின் எந்த நாட்டில் இருந்தும் பணியாற்றலாம்.