அசராத புடின், பரிதவிப்பில் ஜெலன்ஸ்கி.. 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரஷ்யா – உக்ரைன் போர்..!!
பிப்ரவரி 24 வரலாற்றில் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது, கொரோனா பிரச்சனை முடிந்து ஒவ்வொரு நாடும் பொருளாதாரம், வர்த்தகத்தில் மீண்டு வர துவங்கிய காலம் அது, ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல நாள் காத்திருத்த தீப்பொறி, காட்டுத்தீயாக மாறியது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து முழுமையாக 2 ஆண்டுகள் முடிந்து, இன்று 3வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. 2 வருடமாக நடக்கும் உக்ரைன் – ரஷ்யா போர் உலக நாடுகளின் தலையீட்டாலும், ஆதரவாலும் 3ஆம் உலக போர் வரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது மறக்க முடியாது.
இந்த 2 வருட காலக்கட்டத்தில் பல முறை ரஷ்யாவின் படைகளை உக்ரைன் ஓடவிட்டது மறக்க முடியாது. ஆனால் தற்போது மேற்கத்திய நாடுகளின் ஆதரவு குறைந்திருப்பதால் உக்ரைன் பலவீனமடைந்துள்ள நிலையில், ரஷ்யா புதிய பகுதிகளை கைப்பற்றி மீண்டும் போரில் ஆதிக்கம் அடைந்து வருகிறது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலை வேளையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது ரஷ்ய அரசு “சிறப்பு ராணுவ நடவடிக்கை” எடுப்பதாக அறிவித்தபோது, சில நாட்களில் ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் உக்ரைன் 2022ல் உலக நாடுகளின் உதவியால் பதிலடி கொடுத்து, ரஷ்ய படைகளை மிகவும் மோசமான நிலையில் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் பதிலடி தாக்குதலில் தோல்வியடைந்ததால் உக்ரைன் பின்னடைவை சந்தித்துள்ளது. போர் கருவிகளின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்ததன் மூலம் ரஷ்ய ராணுவம் பலம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் உக்ரைன் படைகள் படை பற்றாக்குறை மற்றும் பீரங்கிகள் மற்றும் வான் பாதுகாப்புக்காக மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பற்றாக்குறையை எதிர்கொண்ட காரணத்தால் உக்ரைன் ராணுவம், அரசு அனைத்தும் பின்வாங்க தூண்டியது. .
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளிக்கிழமை பேசுகையில் உலக நாடுகள் ஆயுத விநியோகங்கள் பற்றிய முடிவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற 2வது ஆண்டு கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட மேற்கத்திய தலைவர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான முக்கிய உதவி தொகுப்பை தடுத்து நிறுத்தியது குறித்தும் எவ்விதமான அப்டேட்-ம் இல்லை.
ஏற்கனவே உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நிலைமை மோசமாக இருக்கும் வேளையில், ஐரோப்பிய நாடுகள் வழங்க உறுதி செய்த பீரங்கிகளின் விநியோகத்திலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன, இதனால் உக்ரைன் நாட்டை உலக நாடுகள் புறக்கணித்துள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.
அமெரிக்காவில் அடுத்த சில மாதத்தில் பொது தேர்தல் நடக்க இருக்கும் வேளையிலும், பணவீக்கத்தால் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையிலும், அமெரிக்கா 60 பில்லியன் டாலர் நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துமா என்பது பெரும் கேள்வி தான்.