சீனாவின் ஹேக்கிங் அட்டூழியம்.. 20 நாடுகள் டார்கெட்.. இந்தியாவின் இமிகிரேஷன் தகவல் திருட்டு..!
சீன அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு ஹேக்கர் குழுவில் இருந்து கசிந்த ஆவணங்கள், அந்நாட்டு உளவுத்துறை மற்றும் ராணுவ அமைப்புகள் எப்படியெல்லாம் வெளிநாட்டு அரசுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்களை செய்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, 570 க்கும் மேற்பட்ட பைல்ஸ், புகைப்படங்கள் மற்றும் சாட் விபரங்கள் அடங்கிய தரவுகள் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டு உள்ளது என்ற முக்கியமான ரகசியம் தற்போது கசிந்துள்ளது.
சீன அரசு அமைப்புகள் கோரிக்கையின் அடிப்படையில் ஹேக்கிங் ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டு வெளிநாட்டு அரசு மற்றும் நிறுவனங்களின் தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. .
கடந்த வாரம் GitHub இல் பதிவிடப்பட்ட ஆவணங்களை பார்க்கும் போது, வெளிநாட்டு அரசு மற்றும் நிறுவனங்களின் தகவல்கள் திரட்ட 8 ஆண்டுகளாக சீன அரசு அமைப்புகள் ஹேக்கிங் ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீன அரசு, இந்தியா, ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, பிரிட்டன், தைவான் மற்றும் மலேசியா உள்ளிட்ட குறைந்தது 20 வெளிநாட்டு அரசுகளை டார்கெட் செய்து இந்த மிகப்பெரிய சைபர் அட்டாக் நடந்துள்ளது.
தற்போது GitHub இல் பதிவிடப்பட்ட ஆவண கசிவுகள் ஐசூன் நிறுவனத்திற்கு சொந்தமானவை, இந்த நிறுவனத்தை Auxun என்றும் அழைக்கப்படுகிறது. ஷாங்காய் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 3ஆம் தரப்பு ஒப்பந்தம் அடிப்படையில் ஹேக்கிங் மற்றும் தகவல் திரட்டல் சேவைகளை அரசு அமைப்புகளுக்கு வழங்கி வருகிறது.
இணையத்தில் கசிந்துள்ள ஸ்பிரெட் ஷீட்டில் 80 வெளிநாட்டு அமைப்புகளின் டேட்டா ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 95.2 GB குடியேற்ற தரவு மற்றும் தென் கொரியாவின் LG U Plus தொலைத்தொடர்பு வழங்குநரிடமிருந்து 3 டெராபைட் Call logs சேகரிப்பு ஆகியவை அடங்கும்.
இதேபோல் தைவான் நாட்டின் 459 ஜிபி அளவிலான road-mapping தரவு, இது ராணுவ நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சீனாவின் 20 வருட கால தேசபக்தி ஹேக்கிங் கட்டமைப்பில் வேரூன்றிய ஒப்பந்ததாரர்களில் ஒன்று iSoon அமைப்பு. பொதுப் பாதுகாப்பு அமைச்சகம், மாநிலப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சீன இராணுவம் போன்ற அரசாங்க நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகிறது iSoon.