நிர்மலா சீதாராமன் மும்பை லோக்கல் ரயில் திடீர் பயணம்.. எதற்காகத் தெரியுமா..?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதி தலைநகரமான மும்பை போக்குவரத்து சேவையான லோக்கல் ரயிலில் திடீர் பயணம் மேற்கொண்டு, லட்சக்கணக்கான மும்பை மக்களின் அன்றாடப் பயண அனுபவத்தை நேராக அனுபவித்தார்.

சமீபத்தில் மும்பையின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மும்பை லோக்கல் ட்ரைனில் செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இது மட்டும் அல்லாமல் இந்த ரயில் பயணத்தைப் போட்டோ, வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு 73 வயதான ஹிரானந்தனி குழுமத்தின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான நிரஞ்சன் ஹிராநந்தானி, மும்பையில் உல்லாஸ்நகருக்கு செல்ல வேண்டி, மோசமான டிராபிக்-ஐ தவிர்க்க லோக்கல் ரயிலில் பயணம் செய்த வீடியோ மற்றும் போட்டோ இணையத்தில் டிரெண்டானது.

இதைத் தொடர்ந்து தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்கோபர் முதல் கல்யாண் ஸ்டேஷன் வரையில் பயணம் செய்தார், இந்தப் பயணத்தின் புகைப்படங்களை, நிர்மலா சீதாராமன் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கல்யாண் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தபோது, மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் பாட்டில் அவரை வரவேற்றார் என்று டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

பயணத்தின் போது, நிர்மலா சீதாராமன் பயணிகளுடன் உரையாடியும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் உள்ளார். இதில் சில புகைப்படங்களை நிர்மலா சீதாராமன் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த முயற்சி பொதுமக்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

மும்பை லோக்கல் டிரையின் பயணிகளின் பிரச்சனைகளை நேரடியாக அனுபவித்து, அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சித்தமைக்காகச் சிலர் நிதியமைச்சரைப் பாராட்டியுள்ளனர். ஆனால், மும்பை புறநகர் ரயில்வே தொடர்ந்து சந்தித்து வரும் நெரிசல் மற்றும் கட்டமைப்புப் பிரச்சனைகள் மத்தியில் அவருடைய பயணத்தின் நேரம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நிர்மலா சீதாராமன் ரயில் பயணம் மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *