சர்ஃபராஸ் கானை கதற விட்ட இங்கிலாந்து பவுலர்.. பென் ஸ்டோக்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் 53 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடி ஆட்டம் ஆடி இரண்டு அரைசதம் அடித்த சர்ஃபராஸ் கானா இப்படி தடுமாறி இருக்கிறார்? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
சர்ஃபராஸ் கானின் இந்த மோசமான நிலைக்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-இன் திட்டம் தான் காரணம். சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லியை வைத்து சர்ஃபராஸ் கானை திணற வைத்தார் பென் ஸ்டோக்ஸ்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 130 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் சர்ஃபராஸ் கான் பேட்டிங் செய்ய வந்தார். கடந்த போட்டியை போல அவர் அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் ரன்னே எடுக்க முடியாமல் திணறினார். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி ஓவர்கள் எல்லாம் மெய்டனாக ஆடினார் சர்ஃபராஸ் கான்.
டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் மட்டும் 34 பந்துகளை சந்தித்து அதில் 30 டாட் பால் ஆடினார் சர்ஃபராஸ் கான். 4 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் டாம் ஹார்ட்லியின் 34 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் பந்துவீச்சிலேயே விக்கெட்டையும் பறிகொடுத்தார் சர்ஃபராஸ் கான். மொத்தமாக 53 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சர்ஃபராஸ் கானின் பலவீனத்தை சரியாக பயன்படுத்தி அவரை திணற வைத்து வீழ்த்தி இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் அதிக ரன் குவிக்கவில்லை என்றால் இதுவே அவரது பலவீனம் என விமர்சனம் கிளம்பும். அதற்கு அவர் இடமளிக்காமல் இருந்தால் மட்டுமே தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 134 ரன்கள் பின்தங்கி உள்ளது இந்திய அணி.