இனி வாடகைத்தாய் முறையை பயன்படுத்த கணவன்-மனைவிக்கு புதிய கட்டுப்பாடு..!

கணவன்-மனைவி இருவரில் யாருக்காவது குழந்தை பெற முடியாத குறைபாடு இருந்தால், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் விதிமுறைகள், 2022-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், அவற்றில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை அறிவிப்பாணையாக வெளியிட்டது.

இதுதொடர்பான அந்த அறிவிப்பாணையில், “வாடகைத்தாய் முறையில் பிறக்கப்போகும் குழந்தை, அதன் தந்தையின் உயிரணுவையோ அல்லது தாயின் கருமுட்டையையோ கொண்டிருக்க வேண்டும். அந்த நிபந்தனையுடன்தான் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். அதாவது, கணவன்-மனைவி இருவருக்குமே குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடு இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த முடியாது. யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருந்தால்தான், அந்த முறையை பயன்படுத்த முடியும்.

கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருப்பதாக மாவட்ட மருத்துவ வாரியம் சான்றளிக்க வேண்டும். அதன்பிறகுதான் உயிரணுவையோ அல்லது கருமுட்டையையோ தானமாக பெற முடியும். ஒரு பெண், விதவையாகவோ அல்லது விவாகரத்து ஆனவராகவோ இருந்தால், அவரது சொந்த கருமுட்டையையும், தானமாக பெறப்பட்ட உயிரணுவையும் பயன்படுத்தித்தான் வாடகைத்தாய் முறைக்கு செல்ல முடியும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *