ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்… குஜராத்தில் விழாக்கோலம்
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு குஜராத்தின் ஜாம்நகர் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த பிரமாண்ட திருமண விழாவிற்கு முன்னதாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் வணிக மற்றும் தொழில்நுட்ப உலகின் முன்னணி பிரமுகர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
மார்ச் ஒன்றாம் தேதி காலை 8 மணி முதல் பகல் ஒரு மணி வரை An evening in ever land என்ற பெயரில் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இரண்டாம் நாளில் A wall on the wild என்ற பெயரில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜாம்நகரே மின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.