டெல்லி, குஜராத் உட்பட 4 மாநிலங்களில் ‘கை’ கோர்த்த காங்கிரஸ் – ஆம் ஆத்மி

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி கூட்டணியை இறுதி செய்துள்ளது

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா கூட்டணி. அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், அந்த கூட்டணியில் இருந்து முதலாவதாக வெளியேறி பாஜக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ்குமார். அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், அதே அறிவிப்பை பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பின்பற்றியது. அடுத்ததாக, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா. அத்துடன், டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளிடையே கடும் இழுபறி நீடித்ததால், தேர்தல் வரை இந்தியா கூட்டணி நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், டெல்லி, குஜராத், ஹரியானா, கோவா ஆகிய 4 மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் கூட்டணியை இறுதி செய்திருப்பதாக, அதிரடியாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. 7 மக்களவைத் தொகுதிகள் கொண்ட டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே ஆம் ஆத்மி போட்டியிடும் நிலையில், எஞ்சிய 24 தொகுதிகளிலும் களமிறங்குகிறது காங்கிரஸ். 10 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்தில் 9 இடங்களில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சி, ஒரு தொகுதியை மட்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. மேலும், 2 தொகுதிகளை கொண்ட கோவா மாநிலத்திலும், ஒரு தொகுதி மட்டுமே கொண்ட சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி மட்டுமே போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.

ஆம் ஆத்மி உடனான கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்னதாக, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி உடனான கூட்டணியை முடிவு செய்துவிட்டது காங்கிரஸ். மொத்தம் 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், எஞ்சிய 17 தொகுதிகளில் களமிறங்குகிறது காங்கிரஸ் கட்சி. இருப்பினும், 29 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, வெறும் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது சமாஜ்வாதி கட்சி.

கடந்த மக்களவைத் தேர்தலில் குஜராத், டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரிய கூட்டணி அமைக்காமல் களம் கண்ட காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் தோல்வியையே தழுவியது. இந்த முறை எப்படியாவது வெற்றியை ஈட்டிவிட வேண்டும் என முடிவு செய்துள்ள காங்கிரஸ், கூட்டணி கட்சிகளிடம் விட்டுக்கொடுத்து தொகுதி பேரத்தை நடத்தி வருகிறது. அத்துடன், தனித்து போட்டியிடுவதாக அறிவித்த மம்தா பானர்ஜியுடன் சோனியா காந்தியே நேரடியாக பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து களமிறங்கும் நம்பிக்கையில் இருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *