100 பந்துகளுக்கு மேல் தாக்குபிடித்த 3ஆவது வீரரான குல்தீப் யாதவ் – ரோகித், டிராவிட் பாராட்டு!
ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து முதலில் டாஸ் வென்று விளையாடி 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், கேப்டன் ரோகித் சர்மா முதல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரோகித் சர்மா 2, சுப்மன் கில் 38, ரஜத் படிதார் 17, ரவீந்திர ஜடேஜா 12, சர்ஃபராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 என்று அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 117 பந்துகள் பிடித்து 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரேல் இருவரும் நிதானமாக நின்று விளையாடி விக்கெட் சரிவிலிருந்து மீட்டு ரன்களும் குவித்தனர்.
இந்த நிலையில் தான் இன்றைய 3ஆவது நாள் போட்டியை குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் தொடங்கினர். இதில் குல்தீப் யாதவ் 131 பந்துகள் வரையில் தாக்குப்பிடித்து 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் சேர்த்துக் கொடுத்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிறகு 100 பந்துகளுக்கு மேல் மைதானத்தில் நின்ற வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் பிடித்துள்ளார். மேலும், அவர் பேட்டிங் செய்வதை டக்கவுட்டில் அமர்ந்து ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ரசித்து பார்த்துள்ளனர்.
ஒரு பவுலராக இவ்வளவு பந்துகள் வரையில் பிடித்து அணியை விக்கெட் சரிவிலிருந்து மீட்டு கொடுத்ததற்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.