இந்தியாவில் வின்ஃபாஸ்ட் வெளியிட உள்ள முதல் எலக்ட்ரிக் கார் இது தானா..!
மின்சார வாகனங்களை தயாரிக்க தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் (Vinfast) தொழிற்சாலை கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்துள்ளார். முழு கட்டுமானத்தை அடுத்த 15 மாதங்களில் நிறைவு செய்த முதல் மாடலாக VF e34 வெளியாக வாய்ப்புள்ளது.
சென்னையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.16,000 கோடி திட்டத்தை அறிவித்த மிக குறைந்த நாளிலே அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை துவக்கியுள்ள வின்பாஸ்ட் கார் மட்டுமல்லாமல் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகின்றது.
தமிழ்நாட்டின் மூலம் இந்தியாவில் கால்பதித்துள்ள இந்நிறுவனம் இந்திய மதிப்பிற்கு ரூ.16,000 கோடி முதலீடு செய்து முதற்கட்டமாக ஆண்டுக்கு 150,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைவதால் 3,000 முதல் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.
Vinfast VF e34
வின்ஃபாஸ்ட்டின் 4.3 மீட்டர் நீளம் பெற்ற VF e34 எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள 42kW பேட்டரி பேக் ஆனது 110 kW/147 HP பவர் மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 285 கிமீ ரேஞ்ச் வழங்கும் என NEDC சான்றிதழ் பெற்றுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 18 நிமிடங்களில் 180 கிமீ பயணிக்கும் வரம்பினை பெற உள்ளது. இந்த மாடலின் விலை அனேகமாக 20 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.