விவசாயிகளே இதே கவனிங்க.. உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் தொடக்கம்..!
பிரதமர் மோடி வேளாண் கட்டமைப்பு சார்ந்த பல்வேறு திட்டங்களை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அதில் விவசாயிகளுக்கான தானிய சேமிப்பு கிடங்கு திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கூட்டுறவுத் துறையின் உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 11 மாநிலங்களில் உள்ள முதன்மை வேளாண் கடன் சங்கங்களில் தானிய சேமிப்புக்காக 11 கிடங்குகளை திறந்து வைத்தார்.
மேலும் 500 முதன்மை வேளாண் கடன் சங்கங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சங்கங்களில் குடோன்கள் மற்றும் பிற வேளாண் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியின் போது,18,000 முதன்மை வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கூட்டுறவுத் துறைக்கு பிரதமர் வலியுறுத்தல்: இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ,சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்கள் இறக்குமதியை பெருமளவில் இந்தியா குறைத்து தற்சார்பு பெற வேண்டும், இதற்கு கூட்டுறவுத்துறை தான் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறினார்.
தானிய சேமிப்பு கிடங்கு திட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஆயிரக்கணக்கான கிடங்குகள் கட்டப்படும் என கூறிய பிரதமர் மோடி, இன்று 18 ஆயிரம் முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன என பெருமிதம் தெரிவித்தார்.
இவை அனைத்தும் நாட்டில் வேளாண் உட்கட்டமைப்புக்கு ஒரு புதிய விரிவாக்கத்தை அளித்து வேளாண்மையை நவீன தொழில்நுட்பத்தோடு இணைக்கும் ஒரு திட்டத்தின் பகுதி என குறிப்பிட்டார்.
கிராமப்புற பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம்: தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தலைமையிலான நபார்டின் கூட்டு முயற்சியால் உணவு தானிய விநியோக சங்கிலியுடன் முதன்மை தானிய சேமிப்பு கிடங்குகளை ஒருங்கிணைப்பதே இந்த முயற்சிகளின் நோக்கம் என தெரிவித்தார்.
வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குவதிலும் கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது, அதேபோல் கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குகிறது என்றார்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க தனது அரசு செயல்பட்டு வருகிறது என பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவில் கிராமங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் அளவில் முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 99 ஆயிரம் முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் இயங்குகின்றன.
முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் என்பது கூட்டுறவுத் துறையில் விவசாயிகளோடு இணைந்து செயல்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதின் நோக்கமாக கொண்ட மிகச்சிறிய ஒரு அலகு.
இது மூன்றடுக்கு குறுகிய கால கூட்டுறவு கடன் வழங்கும் அமைப்பின் மிகவும் தாழ்மட்ட நிலையில் உள்ள ஒரு அடுக்கு. மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் கீழ் இது செயல்படுகிறது.