வருடத்திற்கு ரூ.7400 கோடி சம்பளம் வாங்கும் CEO.. யாரு சாமீ நீங்க..?!
பொதுவாகவே அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் நம்மை திகைக்க வைக்கும். இதுக்கெல்லாம் எத்தனை பூஜ்யம் போடுவாங்கனு கூட தெரியலையே என எண்ண வைக்கும்.
ஊதியம் மட்டுமின்றி பங்குகள் அதில் கிடைக்கும் ஈவுத்தொகை என அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைவர்கள் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை பெறுகின்றனர். அப்படி இவரது கடந்த ஆண்டு ஊதியத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றுகிறது.
பிளாக்ஸ்டோன் நிறுவனம்: பிளாக்ஸ்டோன் இன்க் என்பது நியூயார்க் நகரை தளமாக கொண்ட ஒரு மாற்று முதலீட்டு மேலாண்மை நிறுவனம். பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் தனியார் ஈக்விட்டி வணிகம் அவர்களுக்கு பெரிய லாபத்தை ஈட்டி தருகிறது.
அது மட்டுமின்றி ரியல் எஸ்டேட், கடன், காப்பீடு , ஹெட்ஜ் நிதி என நிதி சார்ந்த பல துறைகளிலும் இந்நிறுவனம் கோலோச்சி வருகிறது. சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட இந்நிறுவனம் 1985ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பிளாக் ஸ்டோன் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன், கடந்த ஆண்டில் மட்டும் 896.7 மில்லியன் டாலர்களை ஊதியமாக பெற்றுள்ளார்.
இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 7432 கோடி ரூபாயாக இருக்கும். இது முந்தைய ஆண்டை விட 30 விழுக்காடு குறைவு என்றாலும் அமெரிக்கா நிதி நிறுவன தலைவர்களிலே அதிக ஊதியம் பெற்றவர் இவர் தான்ம்.
77 வயதான ஸ்வார்ஸ்மேன் வெள்ளிக்கிழமை ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் அவருக்கு கிடைத்த ஊதியம் மற்றும் பிற கொடுப்பனவுகள் குறித்து தெரிய வந்துள்ளது. இவருக்கு நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகளில் இருந்து மட்டும் 777 மில்லியன் டாலர்களை டிவிடெண்ட் எனப்படும் ஈவுத்தொகையாக பெற்றுள்ளார்.
கூடுதலாக 120 மில்லியன் டாலர்களை ஊக்க கட்டணங்கள் மற்றும் பங்குகளின் லாபங்கள் மூலம் பெற்றுள்ளார். கடந்த 2022இல் இந்த ஊக்க கட்டனங்கள் மூலம் வரலாற்றிலேயே இல்லாத அளவாக 1.27 பில்லியன் டாலர்களை பெற்றார்.
ஜான் கிரே பெற்ற ஊதியம்: ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் பங்குகள் மற்றும் ஈவுத்தொகைகள் மூலம் கிடைக்கும் பணத்தை மட்டுமே வைத்து உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எப்போது இடம்பிடித்து வருகிறார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 41.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
பிளாக்ஸ்டோன் இன்க் நிறுவனத்தின் தலைவர் ஜான் கிரே , 2023இல் 266.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெற்றுள்ளார். இதுவே ஒரு ஆண்டுக்கு முன்பு 479.2 மில்லியன் டாலர்களாக இருந்தது. தற்போது இது குறைந்துள்ளது. பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டு 83% உயர்ந்தது.