இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளம்: குலசேகரன்பட்டினத்தில் அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!
இந்தியாவின் விண்வெளி ஏவுதள திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை நிறுவ உள்ளது.
இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஏவுதம் நாட்டின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு புவியியல் ரீதியாக சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தப் புதிய ஏவுதளம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார்.
குலசேகரப்பட்டினம் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் உள்ள படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி மற்றும் மாதவன்குறிச்சி ஆகிய கிராமங்களில் 2,233 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமைய உள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் முக்கியத்துவத்தைக் எடுத்துக்கூறியுள்ளனர். செயற்கைக்கோள் ஏவுதலின் போது எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் இந்த ஏவுதளம் உதவும் என்கிறார்கள்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் விண்வெளித் தளத்திலிருந்து ஏவுவது போலன்றி, இலங்கையின் வான்வெளியைத் தவிர்க்க தென்கிழக்குப் பாதைகள் தேவைப்படுகின்றன. இந்த அணுகுமுறை எரிபொருளைச் சேமிப்பதோடு தென் துருவத்தை நோக்கிச் செல்லவும் எளிதாக இருக்கும்.
குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுத்துறை லட்சியங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். விண்வெளித் துறையின் திறன்களை பன்முகப்படுத்துவதன் மூலமும், புவியியல் நன்மைகளை மேம்படுத்துவதன் மூலமும், உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியா முன்னணி நிலைக்கு உயர வழிவகுக்கும் என இஸ்ரோ கூறுகிறது.
புதிய விண்வெளி ஏவுதளம் விண்வெளி ஆய்வுத் துறையில் புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை காட்டுவதாகவும் இருக்ககிறது. எதிர்கால பணிகள் மற்றும் முயற்சிகளுக்கு ஆதரவாக உள்கட்டமைப்பு மற்றும் ஏவுதள வசதிகளில் முதலீடு செய்வது இன்றியமையாத தேவையாகவும் உள்ளது.