குழந்தை வளர்ப்புக்கு அதிக செலவு செய்யும் நாடு எது தெரியுமா?
குழந்தைகளை வளர்ப்பது என்பது இப்போதெல்லாம் சாதாரண காரியம் அல்ல. அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு அளித்தல், சிறந்த ஆடைகள், மருத்துவம், கல்விச்செலவு, இருப்பிடம் எனப் பல செலவுகளும், காரணங்களும் இதில் அடங்கியுள்ளன.
இதன் கராணமாகவே இன்றைய இளைய தலைமுறையினர் இரண்டு பெற்றால் இன்பமயம் என்பதை மறந்து, ஒன்று பெற்றால் ஒளிமயம் என வாழத் தொடங்கிவிட்டனர். காரணம் குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு.
அண்மையில் சீனாவில் ஒரு ஆய்வுக்குழு, ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு உலகின் மிக அதிகமான செலவு பிடிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை கண்டறிந்துள்ளது. சீனாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், குழந்தை பராமரிப்பு, வளர்ப்பு தொடர்பான செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தத் தகவல் சீனாவில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், பரந்த சமூக தாக்கங்களையும் சுட்டிக் காட்டுகிறது. குறிப்பாக குழந்தைகளைப் பெற முடிவு செய்யும் போது கூடுதல் நேரம் மற்றும் வாய்ப்புகளை திட்டமிடச் சொல்கிறது.
சீனாவில் குழந்தைகளை வளர்க்கும் சூழலில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் பரிசீலனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட யுவா மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனத்தின் (YuWa Population Research Institute) அறிக்கையில், ஒரு நாட்டின் ஜிடிபி மற்றும் தனிநபர் வருமானத்தை ஒப்பிடுகையில், 18 வயது வரை ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவு, பல நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவில் கணிசமாக அதிகமாக உள்ளது என்கிறது.
சீனாவில் செலவு தோராயமாக 6.3 மடங்கு, அதேசமயம் ஆஸ்திரேலியாவில் 2.08 மடங்கு, பிரான்சில் 2.24 மடங்கு, அமெரிக்காவில் 4.11 மடங்கு, ஜப்பானில் 4.26 மடங்கு.
இந்த டேட்டா சீனாவில் குழந்தைகளை வளர்ப்பதில் தொடர்புடைய கணிசமான நிதிச் சுமையை எடுத்துக்காட்டுகிறது இந்த நாடுகளில் உள்ள பொருளாதார நிலைமைகளுடன் தொடர்புடைய செலவுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படுத்துகிறது.
சீனாவில் குழந்தைகளை வளர்ப்பதில் ஆண்களைவிட பெண்களை மிகவும் பாதிக்கிறது, இதன் விளைவாக வேலை நேரம் மற்றும் பெண்களுக்கான ஊதிய விகிதங்கள் குறைக்கப்படுகின்றன, ஆண்கள் ஒப்பீட்டளவில் மாறாத வாழ்வாதாரத்தை அனுபவிக்கிறார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அறிக்கையின் இணை ஆசிரியரும், Ctrip மற்றும் YuWa இன்ஸ்டிட்யூட் நிறுவனருமான லியாங் ஜியான்ஜாங்கின் கருத்துப்படி, தற்போதைய சமூகச் சூழலில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் அதிக செலவுகள் இருப்பது சீனாவில் பெண்களுக்கு சவாலாக உள்ளது.
குழந்தைப்பேறுக்கான அதிக செலவு, குடும்பம் மற்றும் வேலையை சமநிலைப்படுத்துவதில் பெண்களுக்கு உள்ள சிரமம் போன்ற காரணங்களால், சீன மக்களின் சராசரி கருவுறுதல் விருப்பம் உலகிலேயே மிகவும் குறைவாக உள்ளது என்று லியாங் கூறினார்.
2023 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்த பின்னர், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை 2016 இல் பாதியாகக் குறைந்துள்ளது. செலவு நிறைந்த குழந்தைப் பராமரிப்பு, திருமணம் செய்யத் தயக்கம், அல்லது தங்கள் தொழிலை பாதிக்கும் என்ற பயம் போன்ற காரணங்களால், அதிக எண்ணிக்கையிலான பெண்கள் குழந்தைப் பேற்றை விரும்புவதில்லை.
0-4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் போது பெண்கள் பொதுவாக 2,106 வேலை நேரம் குறைவதை சந்திக்கிறார்கள்.
இது இந்த காலகட்டத்தில் 63,000 யுவான் ($8,700) ஊதிய இழப்புக்கு வழிவகுக்கிறது. அறிக்கையின்படி, ஒரு மணி நேரத்துக்கு 30 யுவான் ஆகிறது.