IND vs ENG : அஸ்வின் மீது வன்மம்? சூசகமாக குத்திக் காட்டிய சேவாக்.. என்ன சொன்னார்?

இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதப் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவுக்கு நீண்ட நேரம் கழித்தே கேப்டன் ரோஹித் சர்மா ஓவர் கொடுத்தார். அவருக்கு முன்பே ஓவர் கொடுத்து இருந்தால் அவர் சில விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணி 353 ரன்கள் வரை குவிக்கும் முன்பே வீழ்த்த உதவி இருப்பார் என்ற விமர்சனம் எழுந்தது.

ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 4 விக்கெட்கள் சாய்த்தார். அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்திய போதும் குல்தீப் யாதவை தனியாக பாராட்டிய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பதிவில் அஸ்வின் பெயரை சொல்லாமல், குல்தீப் யாதவுக்கு சமூக ஊடகங்களில் அதிக எதிர்பார்ப்பு இல்லை என்றும், அவருக்கு பில்டப்போ, பாராட்டோ கிடைப்பதில்லை எனவும், எதிர்பார்ப்பை கிளப்பும் வகையில் பில்டப் கொடுக்கப்பட தகுதியானவர் என சேவாக் பாராட்டி இருக்கிறார்.

இதன் மூலம், அஸ்வினுக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்படுவதாகவும், குல்தீப் யாதவுக்கு அப்படி கிடைப்பதில்லை எனவும் சூசகமாக கூறி இருக்கிறார் சேவாக். முன்னதாக துருவ் ஜுரேல் 90 ரன்கள் எடுத்ததை பாராட்டிய சேவாக், அவர் நாடகம் போடுவதில்லை, பில்டப் கொடுப்பதில்லை என கூறி இருந்தார். அதன் மூலம் மறைமுகமாக சர்ஃபராஸ் கானை அவர் சாடி இருந்தார்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்தன. அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸில் 145 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது இங்கிலாந்து அணி. இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. நான்காவது நாளின் உணவு இடைவேளைக்குள் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *