நடப்பு சாம்பியன் காலி.. 7 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி செமி-க்கு தமிழ்நாடு தகுதி.. சாய் கிஷோர் சம்பவம்!
7 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதிக்கு தமிழ்நாடு அணி தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது
ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி போட்டியில் செளராஷ்டிரா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய செளராஷ்டிரா அணி, தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோரின் சுழலில் சிக்கி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் சேர்த்திருந்தது. முகமது அலி 17 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று தொடங்கிய 3வது நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் பேட்டிங் தொடர்ந்தது.
பின்னர் விஜய் சங்கர் 18 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அஜித் ராம் 23 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக தமிழ்நாடு அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதுமட்டுமல்லாமல் 155 ரன்கள் முன்னிலை பெற்றது. ஏற்கனவே தமிழ்நாடு அணியின் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் செளராஷ்டிரா அணி திணறிய நிலையில், 2வது இன்னிங்ஸ் ஆட்டம் தொடங்கியது.
செளராஷ்டிரா அணி தரப்பில் ஹர்விக் தேசாய் – கெவின் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் ஹர்விக் தேசாய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் ஷெல்டன் ஜாக்சன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் அனுபவ வீரர் புஜாரா களமிறங்கினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அர்பித் வசவடாவுடன் இணைந்து புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்களை செளராஷ்டிரா அணி எடுத்திருந்தது.
அதன்பின் தமிழக பவுலர்கள் ஆட்டம் தொடங்கியது. முகமது அலி வீசிய பந்தில் வசவடா 20 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ப்ரீரக் மன்கட் 3 ரன்களிலும், சிராக் ஜானி மற்றும் ஜடேஜா ஆகியோர் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனிடையே புஜாராவும் 170 பந்துகளில் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, செளராஷ்டிரா அணி 122 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் தமிழ்நாடு அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் 7 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதிக்கு தமிழ்நாடு அணி தகுதிபெற்றுள்ளது.