என் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும்.. அவரிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன்.. கும்ப்ளே வாழ்த்து!
இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எனது சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வாழ்த்து கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறார். 3வது டெஸ்ட் போட்டியில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக 35வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின். அதுமட்டுமல்லாமல் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் அஸ்வின், தற்போது அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார்.
இதுமட்டுமல்லாமல் தரம்சாலா டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலமாக 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெறவுள்ளார். கடந்த 3 போட்டிகளில் அஸ்வின் விக்கெட் வீழ்த்துவதில் சுணக்கம் காட்டினார். இதனால் பலரும் அஸ்வினின் சரக்கு முடிந்துவிட்டதாக விமர்சித்து வந்தனர்.
இவையனைத்திற்கும் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தரமான பதிலடியை கொடுத்துள்ளார். இந்த நிலையில் அஸ்வின் சாதனை படைத்ததற்கு முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில் கும்ப்ளே பேசுகையில், அஸ்வின் போன்ற வீரர்களை அவ்வளவு எளிதாக ஆட்டத்தில் இருந்து புறந்தள்ளிவிட முடியாது.
அவர் எனது சாதனைகளை முறியடிக்க வேண்டும். நிச்சயம் அவர் புதிய சாதனைகளை உருவாக்குவார். 37 வயதானாலும் அவரால் இன்னும் சில ஆண்டுகள் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க முடியும். அவரின் அனுபவமும், திறனும் அசாத்தியமானது என்று வாழ்த்தியுள்ளார். ஜாம்பவான் வீரரான அனில் கும்ப்ளே தனது சாதனைகள் முறியடிப்பதை விடவும் அஸ்வின் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி சாதனைகள் படைக்க வேண்டும் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.