4வது நாளில் இந்தியாவை வீழ்த்துவோம்! ஆடுகளத்தில் எது வேண்டுமானலும் நடக்கலாம்-இங்கிலாந்து வீரர் பேச்சு
இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டு இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்தது.
இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தங்களுடைய கடைசி இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஆடுகளம் போகப்போக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் பேட்டிங்கிற்கு கடினமாகவும் இருக்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக மாறி உள்ளது.இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி மேலும் 152 ரன்கள் அடிக்க வேண்டும். கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் பஷீர், நான்காவது நாள் ஆட்டத்தில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசி அவர் மூன்றாவது நாள் இறுதியில் நாங்கள் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை எடுக்க திட்டமிட்டு இருந்தோம். நாளை எங்களுக்கு மிகப்பெரிய பணி காத்திருக்கிறது. இந்த ஆடுகளத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் நாளை 10 விக்கெட் எடுக்க எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள நானும் டாம் ஹார்ட்லியும் தயாராக இருக்கின்றோம்.
அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த ஆடுகளத்தில் எவ்வாறு பந்து வீசினார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். இதன் மூலம் எங்களாலும் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற உலக தர வாய்ந்த சுழற் பந்து வீச்சாளர்களை நான் சிறுவயதில் இருந்து கவனித்து வருகின்றேன். நாளை நாங்களும் ஹீரோவாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கிலாந்து அணிக்காக விளையாட போகிறேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தற்போது அது நடந்திருக்கிறது. என்னுடைய இந்த சாதனையை என்னுடைய தாத்தாக்களுக்கு நான் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். நாளை இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆடுகளமும் போகப் போக பேட்டிங்கிற்கு கடினமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது எங்களுக்கு ஒரு நல்ல சகுனமாகும்.