Santhosh Sivan: கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருது.. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு அறிவிப்பு
கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘பியர் அசிங்யு’ விருது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
சந்தோஷ் சிவன்
கேரளத்தை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் சிவன் இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். மணித்னம் இயக்கிய ரோஜா , தளபதி, உயிரே, இருவர் , ராவணன் , செக்க சிவந்த வானம், உள்ளிட்டப் படங்களிலும் முருகதாஸ் இயக்கி விஜய் நடித்த துப்பாகி, ரஜினிகாந்த் நடித்த தர்பார், சூர்யா நடித்த அஞ்சான் உள்ளிட்டப் படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளராக மட்டுமில்லாமல் அசோகா, மல்லி, உருமி, இனம் உள்ளிட்டப் படங்களையும் இயக்கியுள்ளார். இதுவரை 12 தேசிய விருதுகளையும் , 4 கேரள மாநில அரசு விருதினையும் , 3 தமிழ்நாடு மாநில அரசு விருதினையும் வென்றுள்ளார் சந்தோஷ் சிவன். தற்போது அவருக்கு சர்வதேச விருது ஒன்று அறிவிக்கப் பட்டுள்ளது
கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய விருது
பிரான்ஸ் நாட்டில் 1946 ஆம் ஆண்டு முதலாக வருடந்தோறும் நடந்து வரும் நிகழ்வு கேன்ஸ் திரைப்பட விழா. உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களின் கனவாக இந்த விருது நிகழ்ச்சி இருந்து வருகிறது.
இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழா மே 14 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் இந்த விருது விழாவில் விருது பெறும் கலைஞர்களின் தகவல்களும் வெளியானபடி இருக்கின்றன.
இந்த திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப் படும் உயரிய விருது ‘பியர் அசிங்யு’ (pierre-angnieux) . உலகளவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களான வில்மோஸ் சிக்மண்ட், ஃபிலிப் ரூஸேலோட், ராஜர் டீக்கின்ஸ், கிறிஸ்டோஃபர் டாய்ல் உள்ளிட்ட பலர் வென்றுள்ளார்கள்.
இப்படியான நிலையில் இந்த ஆண்டு இந்த விருது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமைக்கு உரியவராகிறார் சந்தோஷ் சிவன். அவருக்கு தமிழ் திரையுலகினர் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.