ட்ராய் வெளியிட்ட சூப்பர் நியூஸ்..! இனி Unknown அழைப்புகளை கண்டு பயப்பட வேண்டாம்!
ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆனது முதல் வீடியோ கால் தொடங்கி பல்வேறு வசதிகள் நமது உள்ளங்கையில் அடங்கி விட்டன. அன்றாட வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது இன்றிமையாத ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலே இருக்கக் கூடும்.
அந்த அளவுக்கு தொலைத் தொடர்புத் துறை என்பது பரந்து விரிந்து அகல கால் பதித்து உள்ளது.
செல்போன்களால் தகவல் தொடர்பு திறன் அதிகரித்தாலும், அதைப் பயன்படுத்தி பலர் தவறான வழிகளிலும் செல்கின்றனர். ஸ்பேம் கால், Unknown நம்பர்களில் இருந்து அழைத்து ஒருவரின் தனிப்பட்ட தரவுகளை திருடி அதில் பணம் சம்பாதிக்க ஒரு கூட்டம் உள்ளது.
இதில் Unknown நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளால் ஏமாற்றப்படுபவர்கள் மீண்டும் அந்த நம்பருக்கு எப்படி அழைப்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனால் பலர் Unknown நம்பர்களில் இருந்து அழைப்புகளை எடுக்க சற்று தயங்குகின்றனர்.
TRAI விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயர்களை ஃபோன் திரைகளில் காட்டுவதற்கான அமைப்புகளை உருவாக்கத் தொடங்கும். இந்த முறைக்குப் பிறகு, யாராவது உங்களை தொலைபேசியில் அழைத்தால், அவருடைய பெயர் திரையில் தோன்றும்.
சிம் கார்டு வாங்கும் போது வாடிக்கையாளர்கள் வழங்கும் KYC தரவுகளை கொண்டு அதில் உள்ள பெயர்களை செல்போன் திரையில் காட்டும் வசதியை பயனர்களுக்கு வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அறிவுறுத்தி உள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆலோசனை அறிக்கயில் இந்த வசதியை TRAI பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை வழங்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் Truecaller போன்ற சில செயலிகளில் இந்த வசதி ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது மோசடிக்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கும். புதிய KYC அடிப்படையிலான செயல்முறை செயல்படுத்தப்பட்டவுடன் அழைப்பாளரால் உங்கள் அடையாளத்தை மறைக்க முடியாது.