மீண்டும் உலக நாயகன் கமலஹாசன் வெளிநாடு பயணம்..!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். வெளிநாட்டில் நடைபெறும் தக்லைப் சினிமா படப் பிடிப்பில் பங்கேற்றுக் கொண்டே பாராளுமன்றத் தேர்தல் பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 19-ம் தேதி அன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் 21-ம் தேதி அன்று ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழாவிலும் பங்கேற்றார். அப்போது கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே வருகிற 29-ம் தேதி மீண்டும் கமல்ஹாசன் வெளிநாடு செல்ல இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதற்குள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனுக்கான இடம் உறுதி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.