Vinfast SUV TN: தூத்துக்குடியில் களமிறங்கிய வின்ஃபாஸ்ட் நிறுவனம் – தமிழ்நாட்டில் உருவாக உள்ள முதல் எஸ்யுவி மாடல் என்ன?
வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF8 EV எஸ்யுவி கார் மாடல் தான், அந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தான 50 நாட்களிலேயே, வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கான பூமி பூஜை தூத்துக்குடியில் நடந்து முடிந்துள்ளது.
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம்:
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காப்ட் பூங்காவில் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 150,000 கார்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் பங்களிப்பதோடு, 3,000 முதல் 3,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும் என கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.
இந்திய சந்தையில் நுழையும் வ்ன்ஃபாஸ்ட்:
வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் நுழையும் மேலும் ஒரு கார் தயாரிப்பு நிறுவனமாகும். தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஆலை அமைப்பதன் மூலம், தனது இருப்பை உறுதியாக நிலைநிறுத்துவதற்கான அதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) தொழிற்பேட்டைக்குள் 400 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் அந்நிறுவனம் முதற்கட்டமாக நான்காயிரத்து 140 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. வியட்நாமில் தற்போதுள்ள உற்பத்தி வளாகத்துடன், அந்நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தியா ஒரு முக்கியமான உற்பத்தி மையமாக இருக்கும். இதைதொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவில் அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளன.
VF8 மின்சார எஸ்யுவி கார்:
Vinfast நிறுவனம் அண்மையில் தனது VF8 பிரீமியம் மின்சார வாகனத்தின் மூலம் அமெரிக்க சந்தையில் நுழைந்தது. இதுவே இந்திய சந்தைக்கான வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் கார்களில் ஒன்றாக இருக்கலாம். தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், VF8 ஒரு பெரிய 4.7m மின்சார வாகனமாகும். இது இரட்டை மோட்டார் தளவமைப்புடன் வருகிறது. இது 400hp க்கும் அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 471 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் வரம்பைக் கொண்டுள்ளது. VF8 ஆனது 5.5 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திராவுக்கு சொந்தமான பிரபலமான ஸ்டைலிங் ஹவுஸான பினின்ஃபரினாவால் VF8 வடிவமைக்கப்பட்டுள்ளது.
VF8 வாகனத்தின் அம்சங்கள்:
அம்சங்களைப் பொறுத்தவரை, VF8 ஆனது 11 ஏர்பேக்குகள், 15.6 இன்ச் தொடுதிரை, ADAS அம்சங்கள், பவர்ட் இருக்கைகள், சூடான ஸ்டீயரிங், வேகன் லெதர் இருக்கைகள், OTA மேம்படுத்தல்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வழக்கமான அம்சங்களைப் பெறுகிறது. மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக 10 வருட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கான வின்ஃபாஸ்ட் மாடல்கள் பற்றிய விவரங்கள் தொடர்பான எந்த தகவலும் தற்போது வரை இல்லை. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட உள்ள, முதல் வாகனம் எது என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.