நிதானமாக விற்பனையான திருப்பதி கோவில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள்… காரணம் என்ன?

திருப்பதியில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு மாதங்களாக நின்று நிதானமாக விற்பனையான திருப்பதி ஏழுமலையான் கோவில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள். காரணம் என்ன? என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி நிற்கும் தேவஸ்தான நிர்வாகம். இது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபடுவதற்காக ஆன்லைன் மூலம் தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்யும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை பக்தர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்வது வழக்கம். நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 டிக்கெட்டுகள் என்ற அடிப்படையில் 30 நாட்களுக்கும் சேர்த்து சுமார் ஒன்பது லட்சம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை மூன்று மாதங்களுக்கும் முன்னதாக முன்பதிவு செய்யும் வகையில் தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

ஒவ்வொரு மாதமும் 24ஆம் தேதி அன்று தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிடும் டிக்கெட்டுகளை பக்தர்கள் தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்கின்றனர். 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 30 நிமிடத்திற்குள் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து வந்தன. அந்த அளவிற்கு பக்தர்கள் போட்டி போட்டு அவற்றை முன் பதிவு செய்தனர்.

எனவே ஏராளமான பக்தர்களுக்கு அவர்கள் முயற்சித்தாலும் ரூ.300 டிக்கெட்டுகள் கிடைக்காத சூழ்நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஏப்ரல் மாதத்திற்கான. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழக்கம் போல் வெளியிடப்பட்டன.

ஆனால் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது முதல் இல்லாத வகையில் சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் மிகவும் நிதானமாக முன்பதிவு செய்தனர்.

அதிகபட்சம் 30 நிமிடத்தில் முடிய வேண்டிய முன்பதிவு இரண்டே முக்கால் மணி நேரம் வரை நீடித்தது ஏன் என்ற கேள்வி பல்வேறு தரப்புகளிலும் அப்போது ஏற்பட்டது. அடுத்த மாதமும் இதே போன்ற நிலை ஏற்படுமோ என்ற சந்தேகமும் அப்போது ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மே மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் வழக்கம் போல் ஆன்லைனில் வெளியிட்டது. இன்றும் கடந்த மாதத்தை போல் சுமார் 90 நிமிட நேரம் அதாவது ஒன்றரை மணி நேரம் பக்தர்கள் மிகவும் நிதானமாக முன்பதிவு செய்தனர்.

கோடை விடுமுறை சமயத்தில் பக்தர்கள் அதிக அளவில் திருப்பதி மலைக்கு வருவது வழக்கம். எனவே மே மாதத்திற்கான 300 ரூபாய் ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் மிகவும் விரைவாக முன்பதிவு செய்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கோடை விடுமுறை மாதத்தில் சாமி கும்பிட ஆன்லைனில் வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் கூட வழக்கத்திற்கு மாறாக நின்று நிதானமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *