ஜூன் மாதம் அமையும் பாஜகவின் 3ஆவது ஆட்சிகாலம்: ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி ஆருடம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த நிலையில், பாஜகவின் 3ஆவது ஆட்சிகாலம் ஜூன் மாதம் அமையவுள்ளதாக பிரதமர் மோடி ஆருடம் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இந்த முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக, அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்துக்கு அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் மறுவடிவமைக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், ரூ.41,000 கோடி மதிப்புள்ள 2000த்துக்கும் மேற்பட்ட ரயில்வே கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். குறிப்பாக, ரூ.19,000 கோடிக்கும் அதிகமான செலவில் அமிர்த பாரத நிலையம் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மறுசீரமைக்கப்பட்ட கோமதி நகர் ரயில் நிலையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அத்துடன், சுமார் ரூ.21,520 கோடி செலவில் நாடு முழுவதும் 1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, “இன்று, ரயில்வே தொடர்பான 2,000க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலம் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கப் போகிறது. ஆனால் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேகம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.” என்றார்.

“நாடு முழுவதும் 5 எய்ம்ஸ் மற்றும் பல மருத்துவ நிறுவனங்களை நேற்று திறந்து வைத்தேன். இன்று, 27 மாநிலங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 554 ரயில் நிலையங்களின் மறு மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கோமதி நகர் ரயில் நிலையத்தையும் திறந்து வைத்துள்ளேன்.” என பிரதமர் மோடி கூறினார்.

இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்தியாவின் புதிய பணி கலாச்சாரத்தின் சின்னமாகும் என்ற பிரதமர், “இன்று இந்தியா எதைச் செய்தாலும், அதை அற்புதமான வேகத்தில் அருமையாக செய்கிறது. இந்தியா இப்போது சிறு கனவுகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டது. நாம் பெரிய கனவுகளைக் காண்கிறோம், அவற்றை நிறைவேற்ற கடினமாக உழைக்கிறோம்.” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “முன்பெல்லாம், ரயில்வேயின் நிதி இழப்புகள் பொதுவான பல்லவியாக இருந்தது, ஆனால் இப்போது அது மாற்றத்தின் மிகப்பெரிய சக்தியாக உள்ளது. இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியதால் இது நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 11ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்தபோது, ரயில்வே பட்ஜெட் சுமார் 45,000 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது, நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கும் போது, நமது ரயில்வே பட்ஜெட் 2.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.” என்றார்.

“நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் போது என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள். அதனால்தான் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற கடுமையாக உழைத்து வருகிறேன்.” என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *