போதை பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்!
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், போதை பொருள் விவகாரம் தொடர்பான ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மனை அதிகாரிகள் ஒட்டிவிட்டு சென்றனர்.
முன்னதாக, ஜாபர் சாதிக் திமுகவை சார்ந்தவர் என்பதால், பலரும் அக்கட்சியை விமர்சித்து வந்தனர். இதையடுத்து, திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் அக்கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.