“மத்திய அரசின் பாராமுகம்” திருச்சியில் திண்ணை பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சி கிழக்குத் தொகுதியில் 65வது வார்டு ஏர்போர்ட் புதுத்தெரு பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியை தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கிய அமைச்சர் தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
மேலும் குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்தார். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதையெல்லாம் மீறி ஒரு நல்லாட்சியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இதனை நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது மற்றவர்களுக்கும் எடுத்து கூறி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர், ஒன்றிய அரசு வஞ்சித்தாலும் தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் என்று கூறினார்.
அப்போது அமைச்சரிடம் தமிழக அரசின் திட்டங்கள் பயனுள்ளதாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், தொகுதி பொறுப்பாளர் ராஜேஷ், பகுதி கழகச் செயலாளர் மணிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் பகுதி வட்ட கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.