என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. அரசியல்வாதி பையன் என்னை பழிவாங்கி விட்டார்- ஹனுமா விஹாரி பரபர புகார்
இந்திய அணிக்காக 16 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பெயர் பெற்றவர் ஹனுமா விகாரி. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று பிறந்து வளர்ந்த வீரராக ஹனுமா விகாரி அறியப்படுகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்டில் டிரா அடைவதற்கு ஹனுமா விகாரியின் அபார ஆட்டம் தான் காரணமாக அமைந்தது.
ஹனுமா விகாரிக்கு தற்போது அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் ஆந்திரா அணிக்காக விளையாடி மீண்டும் அணிக்கு வர வேண்டும் என்று போராடி வருகிறார். ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஹனுமா விகாரியின் புகார் ஒன்று பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ஹனுமா விகாரி இந்த ரஞ்சி கிரிக்கெட் சீசன் தொடங்கியவுடன் ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு திலக் வர்மா அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் காலிறுதி ஆட்டத்தில் ஆந்திரா அணி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த சூழ்நிலையில் சமூக வலைதளத்தில் ஹனுமா விகாரி மிகப் பெரிய குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். அதில் இந்த சீசனில் நாங்கள் கடுமையாக பயிற்சி செய்தோம். கடுமையாக போராடினோம். ஆனால் எங்களால் மீண்டும் வெற்றி பெற முடியவில்லை. மீண்டும் ஆந்திரா அணி காலிறுதியில் தோற்றுவிட்டது. இந்த சூழலில் நான் சில விஷயங்களை வெளிப்படையாக கூற நினைக்கிறேன்.
இந்த தொடரின் முதல் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராக ஆந்திரா விளையாடிய போது நான்தான் கேப்டனாக இருந்தேன். அப்போது போட்டியில் விளையாடி கொண்டிருந்தபோது. அணியில் 17 வது வீரராக இருந்த ஒரு வீரரை பார்த்து நான் கத்தினேன். ஆனால் அந்த வீரரின் தந்தை ஒரு அரசியல்வாதி. இதனால் தன் தந்தையிடம் என்னைப் பற்றி அவர் புகார் அளித்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த அந்த அரசியல்வாதி ஆந்திர கிரிக்கெட் வாரியத்திடம் தன்னுடைய பவரை பயன்படுத்தி என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்க சொல்லி இருக்கிறார். பெங்காலுக்கு எதிரான முதல் போட்டியில் நாங்கள் 410 ரன்ளை சேஸ் செய்தோம். அப்படி இருந்தும் என்னை கேப்டன் பதவியில் இருந்து ஆந்திர கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் விலக சொன்னார்கள்.
நான் அந்த வீரரை தனிப்பட்ட முறையில் திட்டவே இல்லை. ஆனால் என்னை விட அந்த வீரர் தான் முக்கியம் என்று ஆந்திர கிரிக்கெட் வாரியம் நினைத்து விட்டது. ஆந்திர கிரிக்கெட்டுக்காக என்னுடைய உடல், பொருள், ஆவியை நான் வழங்கி இருக்கிறேன். ஒருமுறை காயமடைந்த போது இடது கை பேட்ஸ்மேனாக நின்று ஆந்திர அணியை காப்பாற்றி இருக்கிறேன்.
கடந்த ஏழு வருடத்தில் ஆந்திர அணியை ஐந்து முறை நாக்அவுட் சுற்றுக்கு கொண்டு வந்திருக்கிறேன். இந்திய அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இவ்வளவு செய்தும் நான் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். இந்த அவமானத்திற்கு பிறகும் நான் நடப்பு சீசனில் முழுமையாக விளையாடினேன்.
காரணம் என்னுடைய விளையாட்டையும் என்னுடைய அணியையும் நான் மதிக்கிறேன். ஆனால் கிரிக்கெட் வாரியம் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நாங்கள் கேட்க வேண்டும் என நினைக்கிறது. இது முற்றிலும் தவறானது. இதனை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அசிங்கப்படுத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால் இன்று வரை நான் அதை வெளியே சொல்லவில்லை.
இனி ஆந்திர கிரிக்கெட் அணிக்காக என் வாழ்நாளில் நான் விளையாடவே மாட்டேன். சுயமரியாதை இழந்த இடத்தில் இனி நான் விளையாட போவதில்லை. ஆந்திர அணியை நான் நேசிக்கின்றேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணியாக நாம் முன்னேறி வருகிறோம் என்று எனக்கு தெரியும். ஆனால் ஆந்திர கிரிக்கெட் வாரியம் நம் வளர கூடாது என நினைக்கிறது.